Thursday, October 3, 2013

ஆழ்குழாய் சோகம், இனி வேண்டாம்

ஆழ்குழாய் சோகம், இனி வேண்டாம்.....

சில சோக வடுக்கள் மனதில் இருந்து என்றென்றும் ஆறாது. நமது வீட்டில் நேரிடாத சோகமென்றாலும், அந்த சோகத்தின் வலி,ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் இருக்கும். அதிலும் குறிப்பாக, இயற்கை இடர்பாடுகள் நடக்கும்போதும் சரி, சின்னஞ்சிறு மழலைகள் விபத்துகளில் சிக்கி, இன்னுயிரை இழக்கும்போதும் சரி, எல்லோருடைய கண்களில் இருந்தும் அந்த இழப்பு கண்ணீரை வரவழைக்கும். அப்படியொரு சோக சம்பவம்– சில நாட்களுக்கு முன்பு, ஆரணி அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து இறந்த 4 வயது சிறுமியின் மரணத்தால் எல்லோருடைய மனதையும்  கசக்கி பிழிந்துவிட்டது. எல்.கே.ஜி. படிக்கும் அந்த சிறுமி, பயன்படுத்தப்படாமல் அப்படியே விட்டுவிட்டு செல்லப்பட்ட ஆழ்குழாய் கிணற்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள். அந்த கிணற்றை சாக்குப்பையால் மூடியிருந்திருக்கிறார்கள். தற்செயலாக அதன்மீது கால்வைத்த சிறுமி அப்படியே ஆழத்தில் உள்ளே விழுந்துவிட்டாள். அவளை மீட்க தீயணைப்பு துறையும், காவல்துறையும் எவ்வளவோ போராடியும், 11 மணி நேரம் தொடர்ந்து மட்பு நடவடிக்கையில் ஈடுபட்டும், அவளது உயிரை காப்பாற்ற முடியவில்லை. 30 நிமிட நேரம் டாக்டர்கள் போராடியும், அந்த சிறுமி மரணமடைந்துவிட்டாள்.
அவள் எப்படியாவது பிழைத்துவிடவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமே பதைபதைத்து கொண்டிருந்தது. ஆனால், எல்லோருடைய எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. ஒருமுறைகூட உயிருடன் எந்த குழந்தையையும் மீட்கமுடியவில்லை. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற விபத்துகள் நடக்கும்போது, அந்தநேரத்தில் மட்டும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசப்படுகிறது, எழுதப்படுகிறது. ஆனால், தொடர் நடவடிக்கைகள் இல்லாததால், தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. எப்போதும் திரைப்படங்களில் சிரிப்பதற்கு மட்டுமல்லாமல், சிந்திப்பதற்கும் பல அரிய கருத்துகள் சொல்லிவரும் நடிகர் விவேக், ‘பலே பாண்டியா’ என்ற திரைப்படத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை காட்டி அதுபற்றி குறிப்பிடும்போது, 150 ரூபாய் கொடுத்து ஒரு மூடிப்போடுவதற்கு இல்லாமல், ஒரு உயிரை அனாவசியமாக இழக்கவைத்துவிட்டீர்களே என்று சாடுவார். அதுதான் நிதர்சனமான உண்மை. இத்தகைய பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை மணலாலும் நிரப்பிவிடலாம், அல்லது எளிதில் உடையாத மூடியைக்கொண்டும் மூடிவிடலாம்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதுபோன்ற ஆழ்குழாய் கிணறு விஷயத்தில் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஆழ்குழாய் கிணறுகளை தோண்ட விரும்புபவர்கள், 15 நாட்களுக்கு முன்பே எந்த இடத்தில் இத்தகைய ஆழ்குழாய் கிணறுகளை தோண்டுகிறோம்? என்பதை உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்கவேண்டும். மூடப்படாத கிணறுகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படவேண்டும். எந்தவொரு ஆழ்குழாய் கிணற்றையும் திறந்த நிலையில் ஒருபோதும் விட்டுவிட்டு செல்லக்கூடாது. ஆழ்குழாய் கிணறுகளை அவ்வப்போது கண்காணித்து, பயனற்ற ஆழ்குழாய் கிணறுகளை மூடிவிடுவதற்கு கிராம பஞ்சாயத்து தலைவர்களும், இளநிலை பொறியாளர்களும் பொறுப்பேற்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவற்றும் வகையில், மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
இதுபோன்ற விபத்துகள் நடந்து, அதற்கு இவர் காரணம், அவர் காரணம் என்று குறைசொல்வதைவிட, விபத்து நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட்டு, அதையும் மீறி சிலருடைய கவனக்குறைவால் விபத்துகள் ஏற்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆழ்குழாய் கிணறுகளை தோண்டுபவர்கள் கண்டிப்பாக அதன் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் உரிய கவனம் செலுத்தவேண்டும். கிணறு தோண்டுவதற்கு ஆகும் செலவை ஒப்பிடும்போது, அதற்காக ஒருமூடி போடுவதோ, அல்லது பயன்படுத்தமுடியாத நிலையில் அதை விட்டுவிடும்போது, அதற்குள் மணலை போட்டு மூடுவதற்கோ ஆகும் செலவு ரொம்ப கொஞ்சம்தான். எனவே, ஆழ்குழாய் கிணறுகள் தோண்ட நிச்சயமாக அனுமதி பெற்றுத்தான் தோண்டவேண்டும். அப்படி தோண்டும்போது இந்த நிபந்தனைகளையெல்லாம் நிச்சயமாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பாதுகாக்கும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதிலும், சம்பந்தப்பட்ட துறையினர் மிகவும் கண்காணிப்போடு செயல்படவேண்டும். ‘‘இனியும் வேண்டாம், இப்படியொரு சோக சம்பவம்’’.

No comments:

Post a Comment