Monday, October 7, 2013

இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

இதய நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம். இதய நோயிலிருந்து தப்பிக்க  வேண்டுமா? எடையை குறையுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிருங்கள், டென்சன் படாதீர்கள்  என்று எல்லா மருத்துவர்களும் அட்வைஸ் செய்கின்றனர்.

உண்ணும் உணவு பழக்கத்தை சத்துள்ளதாக மாற்றிக்கொண்டால் இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் அலுவலக வேலைக்கு செல்லும் போது  சிறிது தூரம் காலார நடைபயிற்சி செய்யுங்கள். தினசரி வைட்டமின் ஈ யை உணவில் எடுத்து கொள்பவர்களுக்கு இதயநோய் வர வாய்ப்பில்லை  என்று ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 400யுனிட் வைட்டமின் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு இதயநோய்களே  வருவதில்லையாம்.

வைட்டமின் டி உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், கோதுமை மாவு, முளைக்கட்டிய தானியங்கள், கொட்டை உள்ள உணவுகள் கீரைகள், கடுகு, தாவர  எண்ணெய் போன்றவைகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி குருப்பிலுள்ள போலிக் ஆசிட் நல்ல இதயநோய் தடுப்பாக  செயல்படுகிறது. ஒமேகா3 உடலில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மீன் உணவு, வால்நட், பருப்பு, சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளில் ஒமேகா3 இருப்பதால் இதயநோய் வரும் வாய்ப்பை குறைக்கலாம்.  டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், இவைகளை உபயோகித்து செய்யும் உணவுப் பண்டங்களை தவிர்க்கவும். அதிக கொழுப்பு சத்து நிறைந்த  பாலாடை கட்டி, ஐஸ்கீரிம் போன்றவற்றை குறைவாகவே உபயோகியுங்கள். இதனால் இதயநோய் வரும் வாய்ப்பும் குறையும் என்கிறது ஆராய்ச்சி.

அதிக உப்புள்ள ஊறுகாய், சமையலில் மசாலா பொருட்கள்  சோடா ஆகியவற்றை, முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உப்பிற்கு பதிலாக வெங்காயம்,  எலுமிச்சை, பூண்டு, சேர்த்த உணவுகள் தரமானவை. அளவோடு உண்பது, நேரத்துடன் உணவு உட்கொள்வது போன்றவை இதயத்திற்கு நன்மை  பயக்கும். எப்போதும் புதியதாக தயாரித்த உணவுகளே சிறந்தவை.

புதிய பழங்கள், ஓட்ஸ். கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்காத கோதுமை மாவு சப்பாத்தி எல்லாமே இதயநோயை தடுக்கும். மாதுளம் பழச்சாறு  இதயத்திற்கு வலுவூட்டும் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. நமது உணவு பழக்கங்கள் உடலுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும்.  உணவே நோயை தருவதாக இருந்துவிடக்கூடாது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து இதயத்தை காப்போம்.

No comments:

Post a Comment