Sunday, October 6, 2013

சகல செல்வங்களும் தரும் நவராத்திரி விரதம்;

சகல செல்வங்களும் தரும் நவராத்திரி விரதம்;
-----------------------------------------------------------------
புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி நவமி வரை வரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி விரத காலமாகும்.சிவபெருமானுக்கு ஒரு நாள் விரதம் சிவராத்திரி.
ஆனால் இந்த அம்பிகைக்கு ஒன்பது நாள் விரதம் நவராத்திரியாகும். இந்த நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகையை வேண்டி விரதம் இருக்கவேண்டும். முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை அம்மனையும் நடு மூன்று நாட்களும் செல்வம் வேண்டி மகாலக்ஷ்மி அம்மனையும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதித் தாயையும் வணங்கவேண்டும்.

ஒன்பதாம் நாள் கல்வியை கொடுக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாகும்.பத்தாம் நாள் விஜயதசமி எனப்படுகின்ற வெற்றித்திருநாள். அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாமே என்ற நோக்கில் இந்த நவராத்திரி நாட்கள் புனிதமும் புண்ணியமும் நிறைந்த மகோன்னத நாளெனக் கருதப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலம் என வரலாறு கூறுகிறது. உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.


இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன் வித்யாகாரகன் என்று அழைக்கப்படுகிறான். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய இந்த புதனின் பார்வை மிகவும் முக்கியமானது. எனவே தான் இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது மிகவும் சிறந்தது என கருதுகின்றனர்..

நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பது தான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் முக்கிய தத்துவம் ஆகும். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சகல சொபாக்கியங்களும் கிடைப்பது உறுதி.

No comments:

Post a Comment