Saturday, September 21, 2013

கன்னத்தில் கை வைத்து உட்கார்தல்

கன்னத்தில் கை வைத்து உட்கார்வதை உடல்ரீதியான செயலாகப் புரிந்து கொள்ளத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கையையே முதலீடு செய்திருப்பது மூழ்கிப் போனாலும், வாழாமல் இருந்து விடக்கூடாது. உங்கள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்கக்கூடாது. இழந்ததை எப்படி சரி செய்வது அல்லது ஈடுகட்டுவது என்பதில் கவனம் வைக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் முதலீடு செய்த கப்பல்தான் என்றில்லை. நீங்கள் பயணம் செய்யும் கப்பல் மூழ்குவதாக இருந்தாலும் என்ன செய்வீர்கள்? அது மூழ்கும்போது கன்னத்தில் கை வைத்து செயலற்று உட்கார்ந்தால், எப்படி உயிர் பிழைப்பீர்கள்?
நீச்சல் தெரியும் என்றால், அதற்குத் தயாராக வேண்டும். நீச்சல் தெரியாதென்றால், வேறு எப்படிக் கரை சேர்வது என்று பார்க்க வேண்டும். அதைவிட்டு விட்டு கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்தால்?
சாத்தான் ஒருமுறை தன் சாதனங்களை விற்பனைக்கு வைக்க கடை விரித்தது. கோபம், அகங்காரம், பொறாமை, விருப்பு, சுய தம்பட்டம், வன்முறை என்ற சக்திமிக்க கருவிகள் அங்கே காணப்பட்டன.
சாத்தான் ஒரு மூட்டையை மட்டும் பிரிக்காமல் வைத்திருப்பதைக் கடைக்கு வந்தவர்கள் கவனித்தார்கள்.
“அதில் என்ன இருக்கிறது?” என்று ஆவலுடன் கேட்டார்கள்.
“ஓரு மனிதனை வீணாக்க மற்ற கருவிகள் செயலற்றுப் போனாலும், இந்தக் கருவிகள் செயலற்றுப் போனதேயில்லை… இவற்றை விட்டுக் கொடுக்க எனக்கு மனமில்லை,” என்றது சாத்தான்.
அப்படிப்பட்ட கருவிகள் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக சாத்தான் அந்த மூட்டையைத் திறந்து காட்டியது. மனச்சோர்வு, ஊக்கம் இழப்பு என்ற படுபயங்கரமான ஆயுதங்கள்தான் அவை.
வாழ்க்கையில் நாம் பெரிதாக நினைத்திருப்பது நம் கைவிட்டுப் போனாலும், நம்பிக்கை இழக்காமல், உற்சாகத்தை விட்டுக் கொடுக்காமல், ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட வாசகம் இது.

No comments:

Post a Comment