Tuesday, February 18, 2014

காதல் கொலைகள் காரணம் என்ன?...

காதல் கொலைகள் காரணம் என்ன?

இந்த உலகத்திலேயே மிகவும் துயரமான விஷயங்கள் இரண்டு. ஒன்று… காதலில் தோல்வி அடைவது! இன்னொன்று? காதலில் வெற்றி பெறுவது!

இரண்டாவது துயரத்துக்கு உதாரணம்… நீதிமன்ற வாசல்களில் விவாகரத்து வேண்டி வரிசையில் காத்திருக்கிற காதல் திருமண தம்பதிகள்.

முதல் துயரத்துக்கு உதாரணம், தினசரி தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிற காதல் கொலைகள்.

காதலுக்காக கையை அறுத்துக்கொண்ட, நாக்கை அறுத்துக்கொண்ட, இவ்வளவு ஏன்? தன்னையே அழித்துக்கொண்ட ஆண்களைத்தான் இதுவரை பார்த்திருப்போம். அதெல்லாம் ஓல்டு ஸ்டைல்! காதலை ஏற்க மறுக்கிற பெண்ணைக் கதறக் கதற கொலை செய்வது, அதே வெறியுடன் தற்கொலை செய்து கொள்வது…

இதுதான் காதலில் லேட்டஸ்ட்!

சம்பவம் 1

கோவையைச் சேர்ந்த ரம்யா 24 வயது எம்.சி.ஏ. பட்டதாரி. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், இவரது உறவினர் மதன்குமாருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக காதல். வேலை கிடைத்ததும் மதன்குமாரைவிட்டு, ஒதுங்கினாராம் ரம்யா. ஆத்திரமடைந்த மதன்குமார், அலுவலகம் செல்லும் வழியில் ரம்யாவை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

சம்பவம் 2

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அசீம். அவருக்கு, வடவள்ளியைச் சேர்ந்த தொழிலதிபர் சஜீவ்மேனன் மகள் ஸ்ருதி மீது காதல். இருவரும் இளங்கலை படிக்கும்போதிருந்தே காதலித்துள்ளனர். முதுகலையில் சேர்ந்த நிலையில் இருவரிடையே கருத்துவேறுபாடு ஏற்படவே, காதலனைத் தவிர்த்திருக்கிறார் ஸ்ருதி. இதனால் ஆத்திரமடைந்த அசீம், ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று ஸ்ருதியின் தாயார் லதாவுடன் வாக்குவாதம் செய்து, அவரைக் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு, காதலி ஸ்ருதி இருந்த அறைக்குள் நுழைந்து, அவரையும் குத்தியிருக்கிறார். கொலைவெறி அடங்காமல், ஸ்ருதியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயும் வைத்தார். நெருப்பு பற்றி எரிய, தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, காதலியின் உடல் மீது விழுந்து உயிரை விட்டிருக்கிறார்.

சம்பவம் 3

திருவொற்றியூரைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் செந்தமிழ்ச்செல்வனின் 21 வயது மகள் கார்த்திகா. கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி புரிந்த அவரை, அதே பகுதியைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ராஜரத்தினம் காதலித்தார். இந்தக் காதலில் கார்த்திகாவின் பெற்றோருக்கு உடன்பாடில்லை. மகளிடம் விஷயத்தை விளக்கியதை அடுத்து, அவரும் ராஜரத்தினத்தை விட்டு விலகினார். வேலைக்குச் செல்ல, பிராட்வே பேருந்து நிலையத்தில் காத்திருந்த கார்த்திகாவை, வழிமறித்து, காதலை ஏற்கக் கட்டாயப்படுத்தினார் ராஜரத்தினம். கார்த்திகா அதற்குச் சம்மதிக்காததால், அந்த இடத்திலேயே கத்தியால் கழுத்தை அறுத்து, கொலை செய்திருக்கிறார். அதே கத்தியால் தன்னையும் குத்திக்கொண்டு இறந்து போனார்.

சம்பவம் 4

கோவையைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி அபிநயா. தன் காதலை ஏற்காத காரணத்துக்காக அபிநயாவை, வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்துக் கழுத்தை அறுத்துக் கொன்று, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்திருக்கிறார் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் வேணுகோபால்.
காதல் திருமணங்கள் தவறில்லை என்கிற மன நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிற பெற்றோர் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கின்றன சமீபத்தில் ரத்த வெறிச் செயல்கள். ஏற்கனவே காதலில் விழுந்து விட்ட பல பெண்களும் பீதியில் உறைந்து கிடக்கிறார்கள்.

‘காதல் ஒன்றும் கடவுள் இல்லையடா… இந்த இழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா…’ என இவர்களுக்கெல்லாம் எப்படித்தான் புரிய வைப்பது?

கொலை வெறிக் காதலர்களுக்கு என்னதான் பிரச்னை?

‘‘காதலை ஏற்கவும், மறுக்கவும் அந்தப் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. அவளைக் கட்டாயப்படுத்துவதையோ,
காதலை ஏற்க மறுக்கிற பட்சத்தில்
வன்முறையில் ஈடுபடுவதையோ, ஆணாதிக்க மனோபாவத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய வெறிச்செயலில் ஈடுபடுகிற ஆண், சிறு வயதிலேயே வன்முறை நிறைந்த சூழலில் வளர்ந்தவனாக இருப்பான்.

அப்பா குடித்துவிட்டு, அம்மாவை அடித்துத் துன்புறுத்துவதையும், தான் வைத்ததுதான் சட்டம் என முடிவுகளைத் திணிப்பதையும் பார்த்து வளர்ந்திருப்பான். அல்லது அடி, உதைகள் வாங்கியே வளர்ந்தவனாக இருப்பான். இந்த மாதிரி இளைஞர்களுக்கு வன்முறையை வெளிப்படுத்துவது மிகச் சுலபம்’’ என்கிறார் பிரபல பாலியல் மருத்துவர் காமராஜ்.

வன்முறை உணர்வுள்ளவர்களை அடையாளம் கண்டு தவிர்க்க சில ஆலோசனைகளையும் முன் வைக்கிறார் அவர்.

‘‘காதலிக்கிற போது, ஒவ்வொரு இளைஞனும் தன்னை ஒரு சினிமா ஹீரோ மாதிரிதான் கற்பனை செய்து கொள்கிறார்கள். சினிமா ஹீரோ பத்து பேரை அடிப்பார். பறந்து பறந்து தாக்குவார். தன்னையும் அப்படி கற்பனை செய்து கொள்வார்கள்.

பலருக்கு அது வெறும் கற்பனையோடு நிற்பதில்லை. காதலியுடன் ஓட்டலுக்குப் போகும் போது, சர்வர் செய்கிற சிறிய தவறுக்குப் பொங்கி எழுந்து, தகராறு செய்வது, சாலையில் செல்லும் போது, சக பயணிகளுடன் பிரச்னை செய்து, அடிதடியில் இறங்குவது எனக் கூடுதலாக உணர்ச்சிவசப்படுகிற இந்த கேரக்டர்களை ‘ஜெர்க்’ என்கிறோம்.

நடைமுறையில் வன்முறை உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத இந்த நபர்களைக் கல்யாணம் செய்கிற பெண்களுக்கு திருமண வாழ்க்கை நிச்சயம் நரக மாகத்தான் அமையும்.
காதலிக்கிற போது மற்றவர்களிடம் வெளிப்பட்ட அதே வன்முறை, திருமணத்துக்குப் பிறகு மனைவியிடமும் கட்டாயம் வெளிப்படும்.

எழுதப்படாத சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு, அவற்றை யாராவது மீறும் போது, யாராக இருந்தாலும், அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்காத அரக்கர்கள் இவர்கள். இப்படிப் பட்டவர்களுடன் வாழ்வது போராட்டம்தான்.

இந்த கேரக்டரை அடையாளம் கண்டுவிட்டால், அந்தக் காதலைத் தொடர்வது பெண்களுக்கு நல்லதல்ல. அதைவிட முக்கியமானது, காதலை முடிவு செய்ய குறைந்த பட்சம் 2 வருடங்களாவது அவகாசம் அவசியம்.

அந்த 2 வருடங்களில் அந்த ஆணின் குணாதிசயங்களைக் கவனிக்க வேண்டும். யாரிடம், எப்படிப் பழகுகிறார், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவரா என்பதைக் கண்காணிக்க வேண்டும். கல்யாணத்துக்குப் பிறகு சரியாகி விடும் என்றோ, திருத்திவிடலாம் என்றோ தப்புக்கணக்கு போட்டு, தியாகிப் பட்டம் சுமக்க வேண்டாம்’’ – எச்சரித்து முடிக்கிறார்.

நன்றி-தினகரன்

No comments:

Post a Comment