Wednesday, February 5, 2014

உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம்,,,

உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம்,,,


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் கால் பங்கில் கால் பங்காவது வீணாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில், ஒரு மனிதன் ஆயுள் முழுமைக்கும் உயிரோடு வாழத் தேவையான உணவை வீணாக்குகிறான்.

உணவு பொருட்களை வீணாக்குவது என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாத காரியம் தான். ஆனால், பொருள் வீணாவதை நினைத்து பலரும் கவலைப்படுவது கூட இல்லை.

அப்படி கவலைப்படுவதால் என்ன நடந்து விடப் போகிறது என்று கேட்கலாம்.. நிச்சயம் நடக்கும்.. உங்கள் கவலையால் சில திட்டமிடல்களை நீங்கள் செய்ய முன்வரலாம்.

அதாவது, உங்களது உணவு திட்டத்தை முறையாக வகுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பேருக்கு எவ்வளவு, நான்கு பேருக்கு எவ்வளவு என திட்டமிட்டு உணவை தயாரியுங்கள். அவை மீதமாகும் போது அதனை என்ன செய்வது என்பதையும் திட்டமிடுங்கள். அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வதும், அதிகமாக சமைப்பதும் உணவு வீணாவதற்கு அடிப்படைக் காரணங்களாகும். வாரத்துக்கு ஒரு முறையாவது, பிரிட்ஜில் உள்ள காய்கறிகளை காலி செய்துவிட்டு அதன் பிறகு அவற்றில் புதிய காய்கறிகளை வாங்கி நிரப்புங்கள். உணவு பொருள் ஒன்று இருக்கும் போதே புதிதாக மற்றொன்றை வாங்கி வைக்காதீர்கள். இதனால் புதிய பொருளை பயன்படுத்தி, பழைய பொருள் கெட்டுப் போக வாய்ப்பினை ஏற்படுத்தி விடுவோம்.

மேலும், பிரிட்ஜில் காய்கறிகள், பழங்களை வெகு நாட்களுக்கு பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அவற்றை பயன்படுத்துவதால், பிரிட்ஜில் வைக்கும் பொருட்கள் கெட்டுப் போகாமல் தடுக்கலாம்.
எப்போதும் அளவுக்கு அதிகமாக சாதம் வடித்து அதனை மீதமாக்காமல், உங்களுக்குத் தேவையான அளவை சரியாக கணித்து சாதம் வடிப்பது தான் புத்திசாலித்தனம். இதற்கு, முன்னோர்கள் பயன்படுத்திய ஆழாக்கு போன்றவற்றை பயன்படுத்தாமல், சிறிய டம்ளர்களைக் கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் உங்களுக்கு வசதியாக இருப்பின்.
உங்கள் வீட்டில் அவ்வப்போது காய்கறிகள் சமைக்கும் முன்பே வீணாகின்றன என்றால், சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கும் உங்கள் பழக்கத்தில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று தெரிந்து கொள்ளுங்கள். பார்க்கும் காய்கறிகளை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள்.

அரிசி போன்ற தானியங்களைக் கழுவும் போது, தண்ணீருடன் சேர்த்து ஒரு சில தானியங்கள் வீணாவதை முடிந்த மட்டும் தவிருங்கள். இது ஒரு நாளைக்கு ஒரு தானியம் என்றால் உங்கள் ஆயுளுக்கும் நினைத்துப் பாருங்கள்.

நாம் இங்கு உணவுகளை வீணாக்கும் அதே நேரம், இந்தியாவில் எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஆண்டுக்கு போதிய உணவு இன்றி ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்தியாவில் இறக்க நேரிடுகிறது. உணவு தானே வீணாகிவிட்டது என்று நினைக்காமல், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உணவை நாம் இங்கே வீணாக்கிவிட்டோம் என்று சிந்தியுங்கள். அப்போது புரியும் அதன் வலி.

காய்கறிகளின் தோலை சீவும் போது, அதனுடன் பெரும்பாலான காய்கறிகளையும் நீக்கிவிடாமல், மிகக் கவனமாக தோலை மட்டும் நீக்க முயலுங்கள். சில பொருட்களுக்கு பயன்படுத்துவதற்கான காலக் கெடு தேதி இடப்பட்டு இருக்கும். அவ்வாறான பொருட்களை அந்த தேதிக்குள் பயன்படுத்தி விடுங்கள்.

ஒரு சில நாட்கள் ஆகிவிட்டது என்று அந்த பொருளை ஆராயாமல் தூக்கி எறியாதீர்கள். அதனை வேறு வழிகளில் பயன்படுத்த வாய்ப்பிருந்தால் அவ்வாறு பயன்படுத்துங்கள்.

No comments:

Post a Comment