Wednesday, February 12, 2014

காதலர் தினம்

காதலர் தினம்
###################

பிப்ரவரி 14,
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று
பல காதல் சொல்லப்படுகிறது...
நான் உன்னைக் காதலிக்கவில்லை என
சில காதல் கொல்லப்படுகிறது...
என்று நான் எழுதிய கவிதைதான் நினைவிற்கு வருகிறது.

காதலிக்கும் காதலர்களுக்கு வேண்டுமானால்
அது காதலர்தினமாக அமையலாம்.
ஆனால், அள்ள அள்ளக் குறையாத
காதலுக்கு ஏது தினம்???
தினம்தினம் கொண்டாட்டம்தான்.
இத்தினத்தில் எந்த அளவிற்கு கொண்டாட்டங்கள்
நிரம்பி வழிகிறதோ, அதே அளவிற்கு எதிர்ப்புகளுக்கும்
பஞ்சமிருக்காது.

காதலர்தினத்தை எதிர்ப்பவர்களின் வாழ்வில்
காதல் இல்லாமலா இருந்திருக்கும்??
கட்டாயம் ஏதோ ஒரு வடிவத்தில் காதல் இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கும்.
காதல் அவர்களிடத்தில் இல்லையென்றால்,
அவர்கள் மட்டும் எப்படி உயிர்ப்புடன் இருக்க இயலும்???

முதலில் காதல் எனும் வார்த்தையின்
உணர்வுப்பூர்வமான உள் அர்த்தத்தை
புரிந்துகொள்ள வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையிலான காதல், வெறும் ஹார்மோன்களின்
ஆட்டம்தான் என நினைத்தால்,
அப்போதே காதல் நம்மைவிட்டு கொஞ்சம்
தள்ளிப்போய்விடும்.

காதல் என்பதும் அன்பு என்பதும்
வேறு வேறல்ல. காதலில் அன்பும்,
அன்பில் காதலும் கலந்தேதான் இருக்கிறது.
எத்தனைபேர் பெற்றோரின்மீதான காதலை,
மனைவியின்மீதான காதலை,
மகள்களின்மீதான காதலை,
நட்பின்மீதான காதலை
சுமந்துகொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் அவர்கள் சுமந்துகொண்டிருப்பது,
ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வை;
ஓர் அதீத சொர்க்கத்தை;
ஓர் ஆழமான அன்பை;
இப்படி அனுதினமும் காதலோடு இயைந்தவர்கள்
ஒருபோதும் அதை, ஒருநாள் கொண்டாட்டமாய்க்
கருதமாட்டார்கள்;
அவர்களின் வாழ்க்கையே
காதல் சார்ந்த கவிதையாய்தான் மலர்ந்து கொண்டிருக்கும்.

தெரியாமல்தான் கேட்கிறேன்;
இந்த பிப்ரவரி 14,ல் இருக்கும் இந்தக் காதல்,
பிப்ரவரி 15ல் எங்கே போய்விடுகிறது?
அடுத்த பிப்ரவரி 14,ல் தான் இந்த உலகம்முழுக்க காதல் உணரப்படுகிறதா???
அதுவரை???

காதல் எங்கேயும் போவதில்லை.
நாம்தான் காதலைவிட்டு ஒருவருடத்திற்கு
தள்ளிப் போய்விடுகிறோம்.

“ஐ லவ் யூ” எனும் மூன்று வார்த்தைகளில்
அளக்க முடியாது காதலின் அளவில்லா அளவை;
ஒற்றை ரோஜாவாலோ, ஒரு கிரீட்டிங் கார்டாலோ
தீர்மானிக்க முடியாது காதலின் ஆழத்தை;
நான்கு வரிக் கவிதைகளில்
உணர்த்த முடியாது காதலின் உன்னதத்தை;

காதல் நம் இயல்பில் வழிந்தோடட்டும்;
காதல் நம் உணர்வில் கரைந்திருக்கட்டும்;
உள்ளிழுக்கும் மூச்சில் காதல் கலந்திருக்கட்டும்;
வெளிவிடும் மூச்சிலும் காதலே பரவட்டும்;

தவத்தைச் சுமந்து செல்லும்
ஒரு துறவியைப்போல,
வாத்தியங்களைச் சுமந்திருக்கும்
ஒரு இசைக்கலைஞனைப் போல,
பயணங்களை சுமந்து திரியும்
வானம்பாடிகளைப் போல,
நம் உணர்விலும், நம் உயிர் அசைவிலும்
காதலைச் சுமந்து திரிந்தால் போதும்...
தினமும் நமக்கு காதலின் தினம்தான்....!!!

காதலே ஜெயம்...!!!
காதலே சரணம்...!!!
காதலே போற்றி...!!!

( கத்தல் தொடரும்...........)

நிர்மலா கணேஷ்
குடுகுடுப்பைக்காரன்:
##################
குறி:17
###################


No comments:

Post a Comment