Thursday, February 20, 2014

தாய்(மொழி) இல்லாமல் நாம் இல்லை.....

தாய்(மொழி) இல்லாமல் நாம் இல்லை:

மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும்.
மனிதனின் அடையாளம், அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு.

அம்மா தான், மொழியை கற்றுத் தரும் முதல் ஆசிரியை. உறவை, உணவை, உணர்வை கற்றுத் தருவது அவள் தான். எத்தனை மொழிகள் படித்திருந்தாலும், காதலையும், வேதனையையும் தாய்மொழியில் தான் முழுமையாகச் சொல்ல முடியும். ஆபத்து சமயத்தில் தானாக வருவது தாய்மொழி தான். உலகநாடுகளில் அனைவருமே, அவர்களது தாய்மொழியில் தான் பேசுகின்றனர். சொல்வங்கி உருவாவது, தாய்மொழியில் தான். வீட்டில் பெற்றோர், உறவினர்கள் தமிழில் குழந்தைகளிடம் பேசாவிட்டால், மொழியில் சங்கடம் தான் ஏற்படும். மொழி அழிந்தால், அந்த இனமே அழிந்து விடும். நமது அடையாளமே தமிழ்மொழி தான். மென்மையான உறவுகளைச் சொல்வது, தகுதியான சொல்லை வெளியிட முடிவது, தாய்மொழியில் தான். மூத்தோரிடம் இருந்து உடம்புக்குள், உயிருக்குள் ஊறிவரும் விஷயம் தாய்மொழியே. தாய்மொழியில் சிந்திப்பவர்களே, என க.ஞானசம்பந்தன் பேராசிரியர், (தியாகராஜர் கல்லூரி, மதுரை) கூறுகிறார்....

:தாய்மொழி தெரியாவிட்டால் எந்த மொழி படித்தாலும், புரியாது. தாய்மொழியில் தான் சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும்.

கருவில் கற்கும் மொழி :
---------------------------------

தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை, குழந்தை கற்றுக் கொள்கிறது என்கிறார், மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.

அவர் கூறியதாவது: தாய்மொழியை அறிமுகப்படுத்துவது, தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள், வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ, அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே, குழந்தைகளால்
கற்றுக் கொள்ள முடியும். மொழியை நன்கு பழகிய பின், மூன்றரை வயதுக்கு மேல், இரண்டாவது மொழியை கற்றுத் தரலாம். அப்போது தான் குழப்பமின்றி தெளிவாக பேசமுடியும்.
தமிழ்மொழியில் நிறைய சப்தங்கள் இருப்பதால், குழந்தைகளுக்கு உச்சரிப்பு வேறுபாட்டை நாக்கை சுழற்றுவதன் மூலம், கற்றுத் தருவது எளிது. வாயை நன்றாக திறந்து பேசுவதற்கு தமிழ் மொழியே உதவும். வாயின் எல்லாப் பகுதிகளையும் நாக்கு தொட்டு, மடங்கிப் பேசமுடிவது, தமிழ்மொழியில் தான். பேச்சின் தெளிவு வருவதற்கு தமிழ்மொழி உதவும்.வெளியில் எந்த மொழியில் பேசினாலும், வீட்டில் தாய்மொழியில் தான் பேசவேண்டும். அப்போது தான் குழந்தை எளிதாக, சொல் வழக்கைப் புரிந்து கொள்ளும். வீட்டில் பல மொழிகள் பேசினால், மூன்று வயது வரை, மொழி வளர்ச்சி இல்லாமல், பேச்சு மொழி தாமதப்படும். ஒரே மொழியில் பேசும் போது, பழகும் போது மொழி வளர்ச்சி வேகமாக, தெளிவாக இருக்கும்...

நம்மொழியாம் தமிழ்மொழி அது எம் தாய்மொழி வாழ்க தமிழ்..இன்றும் என்றும்!

அனைவருக்கும்
தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்.

தமிழ் வாழ்க.

No comments:

Post a Comment