Wednesday, June 11, 2014

பூலோக தேவாமிர்தம் தேன்....


பூலோக தேவாமிர்தம் தேன்....

தமிழர் வாழ்வில் தேனுக்கு மகத்தான இடம் இருந்து வருகிறது. தேனை அன்புக்கு உரியவர்களுக்கு வழங்கும் அன்பளிப்பு பொருளாக தமிழர்கள் பயன்படுத்தியதாக பழந்தமிழ்ப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

‘‘வாதமொடு பித்தம் மாற்றும்
மாந்தமெனும் நோயை விரட்டும்
ஆறுதலென அரும்பசி ருசியூட்டும்
ஆதலினால் இது கொம்புத் தேனே’’

என்று பாடுகிறார், புலிப்பாணி சித்தர்.

மாமரம், வேப்ப மரம் ஆகிய மரங்களின் உச்சாணிக் கொம்பில் கட்டப்படும் தேன் கூட்டில் இருந்து கிடைக்கும் வெறும் தேனை அருந்தினால் வாத நோய் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தத்தை போக்கும். பசியையும், ருசியையும் அதிகப்படுத்தும் என்பது இந்த பாடலின் பொருள்.

மலை உச்சிகளில் இருந்து கிடைக்கும் தேனை அருந்தினால் ஈளை, இருமல், காச நோய், அள்ளு மாந்தம், கடும் இருமல் எல்லாம் குணமாகி விடும் என்கிறது, தேவாரம். மரப் பொந்தில் இருந்து கிடைக்கும் தேன் மூலம் ஊளைச் சதை குறையும். விக்கல், இருமல், சயரோகம் ஆகியவை குணமாகும் என்கிறது, வைத்திய அந்தாதி. கண் நோய்களையும் வீட்டுத் தேன் போக்கும் என்கிறது, வைத்திய பரிபூரணம் எனும் நூல்.

புகழ் பெற்ற ‘ஒதுக்கப்பட்ட முதுமைக் காலம்’ என்ற நூலை எழுதிய டாக்டர் அர்னால்டு, தேன் இருதயத்தை காக்கும் மிகச் சிறந்த உணவு என்கிறார். இருதயம் பலவீனமாக உள்ளவர் களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ரத்தக் குழாய் பலவீனமானவர்களுக்கும் சிறந்த மருந்து தேன். இருதயம் பலவீனமானவர்கள் இரவில் தூங்கும் முன்பு சிறிதளவு நீரில் தேனையும், சில சொட்டுக்கள் எலுமிச்சை சாற்றையும் கலந்து அருந்தினால் இருதயம் பலமானதாக மாறும் என்கிறார்.

பச்சைக் காய்கறிகளுடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலரும் சர்க்கரை நோயில் இருந்து விடுபட்டுள்ளனர். தேனுடன் எலுமிச்சை சாற்றையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். சிறிது நாட்கள் கழித்து அவர்களை பரிசோதித்த போது சர்க்கரை நோய் பாதிப்பு அறவே இல்லை. தேன் கசப்புச் சுவை உடையது என்கிறது, உணவு மருத்துவம். கபம், பித்த நோய் என்று பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் தேனுக்கு உண்டு என்கின்றன, சித்த மருத்துவ நூல்கள்.

தேன் தானும் கெடாது, தன்னை சார்ந்த பொருட்களையும் கெட விடாது. எளிதில் அழுகிப் போகும் பழங்களை தேனுடன் சேர்த்தால் அது பல நாள் கெடாத பஞ்சாமிர்தமாக மாறுகிறது. அமிர்தம் என்ற சொல்லே அதன் மகத்துவத்தை சொல்கிறது. பாற்கடலை கடைந்ததால் தேவாமிர்தம் கிடைத்ததாக புராணம் கூறுகிறது. அது போல மனிதர்களுக்கு பூலோகத்தில் கிடைக்கும் தேவாமிர்தம் என்பது தேன் மட்டுமே.

No comments:

Post a Comment