கல்விக் கடன் சிக்கல்கள், தீர்வுகள் - 1
ப்ளஸ்டூ படித்து முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரியில் சேருவதற்கான காலம் இது. வங்கியில் கடன் வாங்கி படிக்க நினைக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பெருகிவிட்ட காலமிது. இந்த சமயத்தில், கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன, இதுதொடர்பான ஐ.பி.ஏ. (இந்திய வங்கிகள் கூட்டமைப்பு) நெறிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்பது பொருத்தமான விஷயமாக இருக்கும் அல்லவா? 1. விண்ணப்பத்தைப் பெற அல்லது தர மறுப்பது ! ஒவ்வொரு வங்கியும், கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக தரவேண்டும். ஒரு மாணவருக்கு கல்விக் கடன் தரலாமா, வேண்டாமா என்பதை அந்த மாணவரிடமிருந்து விண்ணப்பம் பெற்றபிறகே சொல்லவேண்டும். விண்ணப்பம் வாங்குவதற்கு முன்னதாகவே கடன் கிடையாது என சொல்லி, அவர்களை மரியாதைக் குறைவிற்கு ஆளாக்குவது சரியாகாது. அதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கிகள் கட்டாயம் பெறவேண்டும். பெற்றவுடன் விண்ணப்பதாரருக்கு பற்றுச்சீட்டு (Acknowledge) வழங்கவேண்டும் என்பதும் கட்டாயம். 2. விண்ணப்பத்தைப் பரிசீலிக்க நீண்டகாலம் பிடிப்பது ! கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைப் பெற்றதும் வங்கிகள் 15 நாட்களுக்குள் அதை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் தகுந்த காரணத்தோடு விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்தவேண்டும். அப்படி தெரியப்படுத்தாதபட்சத்தில், வங்கி குறைதீர்க்கும் பிரிவில் மாணவ/மாணவியர் தெரியப்படுத்தலாம். வங்கி குறைதீர்க்கும் பிரிவிலிருந்து முறையான பதில் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்றால், ஆர்.பி.ஐ. வங்கி குறைதீர்ப்பாளர் அலுவலகத்தில் முறையிடலாம். 3. மதிப்பெண்ணைக் காரணம் காட்டி கடன் தர மறுப்பது ! சில வங்கிகள் மதிப்பெண் குறைவாக இருக்கும் காரணத்தால் கல்விக் கடன் தர மறுக்கின்றன. ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, குறைந்தபட்ச மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. வங்கியானது ஐ.பி.ஏ. நெறிமுறைகளை அப்படியே அமல்படுத்தினால் மதிப்பெண்ணைக் காரணம்காட்டி கடன் தர மறுக்கக்கூடாது. ஆனால், ஒவ்வொரு வங்கிக்கும் இந்த நெறிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்ய அதிகாரம் இருக்கிறது. மேனேஜ்மென்ட் கோட்டாவில் (சுயஉதவிக் கல்லூரிகளில்) இடம் கிடைத்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணைக் காரணம் காட்டி சில வங்கிகள் நிராகரிக்கலாம். அந்தக் கல்லூரிகளின் வளர்ச்சி, கல்லூரிகள் அமைத்துக்கொடுக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விஷயங்களில் குறைபாடுகள் இருப்பின் அதையும் காரணம் காட்டலாம். ஆனால், மெரிட் தகுதியுள்ள மாணவர்கள் சுய உதவிக் கல்லூரியில் இடம் கிடைத்தால், ஐ.பி.ஏ. நெறிமுறைகளுக்கு உட்பட்டவர்களாவர். 4. கடன் தர அடமானம் (Security) கேட்பது ! ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, கடன் தொகை 4 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், எந்த பிணையமும் கேட்கக் கூடாது. 4-7.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், மூன்றாம் நபர் கேரன்டி வேண்டும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேலிருந்தால், ஏதாவது ஒரு சொத்தினை (Tangible Security)சமர்ப்பிக்க வேண்டும். 5. கடனில் அடங்கும் அங்கங்கள் ! சில வங்கிகள் கல்விக் கடனைக் கணக்கிடும்போது, வெறும் கல்லூரிக் கட்டணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளும். ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, டியூஷன் ஃபீஸ் தவிர்த்து, தேர்வுக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், புத்தக கட்டணம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, கடன் தொகையை மதிப்பிடவேண்டும். இப்படி மதிப்பிடத் தவறினால் முன்னமே சொன்னதுபோல முதலில் புகார் தெரிவிக்க வேண்டியது அந்த வங்கியினுடைய குறைதீர்க்கும் பிரிவில்தான். 6. கடன் தந்தவுடன் திரும்பக் கட்ட சொல்வது ! ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, படிப்பு முடிவடைந்து ஒரு வருடத்திற்குள் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதத்திற்குள் (எது முதலில் அமைகிறதோ) கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் தொடங்கும். அதற்கு முன் கடனைத் திருப்பித்தர வங்கியானது மாணவர்களை வற்புறுத்தக்கூடாது. ஆனால், வேலை கிடைத்தவுடன் கல்விக் கடனை திரும்பக் கட்டுவது மாணவர்களின் கடமை. - டாக்டர் சுஜாதா எலிசபெத் பிரசாத் * நாணயம் விகடன் |
Saturday, June 28, 2014
கல்விக் கடன் சிக்கல்கள், தீர்வுகள் - 1
Subscribe to:
Post Comments (Atom)
hmm
ReplyDelete