Wednesday, December 25, 2013

இன்று 9-ம் ஆண்டு சுனாமி நினைவு நாள்.!

 இன்று 9-ம் ஆண்டு சுனாமி நினைவு நாள்.!

சுனாமி பேரலைக்கு ஆருயிர்களை பறிகொடுத்த 9-ம் ஆண்டு நினைவு தினம்





சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் ருத்ரதாண்டவத்தால் ஏராளமான உயிர்களை கடல் விழுங்கிய 9-ம் ஆண்டு நினைவு தினம், நாளை (வியாழக்கிழமை) தமிழக கடற்கரைகளில் மறக்க முடியாத துயர நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகிறது. இது ஆவேசமாக கரையை தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் திடீரென ஏற்பட்ட பூகம்பத்தால் நம் நாட்டில் ஆந்திரா, புதுச்சேரி மற்றும் நம் தமிழகத்தின் சென்னை, நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் ஒரு பனைமரம் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி கடற்கரை பகுதியை தாக்கின.

சுனாமியின் கோரதாண்டம் 6 ஆயிரத்திற்கு மேலான மனித உயிர்களை பறித்துக்கொண்டதுடன், கோடிக்கணக்கான மதிப்பிலான மீனவர்களின் உடைமைகளும் சேதமடைந்தன.

சுனாமி தாக்குதல் நடந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. தலைமுறை தாண்டியும் இந்த சோகச்சுவடுகள் என்றும் மறையாது. நீங்காத நினைவுகளோடும் நீர்வழியும் விழிகளோடும் கனத்த இதயத்தோடும் பறிகொடுத்த தங்கள் உதிர உறவுகளை நினைத்து வேளாங்கண்ணி போன்ற ஒரு சில இடங்களில் உள்ள நினைவுச்சின்னங்களில் மக்கள் ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினமாக டிசம்பர் 26-ந்தேதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இன்று 9-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி, கடலூர், வேளாங்கண்ணி கடற்கரை பகுதிகளிலும் மற்றும் சென்னையில் மெரினா கடற்கரை, காசிமேடு கடற்கரை, பட்டினப்பாக்கம், அயோத்தியா நகர், காஞ்சீபுரம் மாவட்டம் சதுரங்கப்பட்டினம் மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் பலர் கடலுக்கு மெழுகுவர்த்தி மற்றும் அகல்விளக்கு ஏந்தி சென்று பால் ஊற்றி, மலர் தூவி சுனாமியில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

மீனவர்களும் தங்கள் பங்குக்கு மீன்பிடிக்க செல்லாமல் கடல் அன்னைக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

இனியும் சுனாமிக்கு இந்திய மனித உயிர்களை பலியிட நாம் தயாராக இல்லை. எனவே நம் கடல் பகுதிகளில் அதிகளவு சுனாமி மிதவை கருவியை அமைத்து வரும் காலத்திலாவது சுனாமியிலிருந்து மனித உயிர்களையும், சொத்துக்களையும் காக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment