Thursday, March 6, 2014

தற்கொலை அதிர்ச்சி ....

வேண்டாம் விபரித முடிவு....

 தற்கொலை அதிர்ச்சி

உலகில் தினமும் 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 2 பேர் இறக்கிறார்கள். இதுபோல தினமும் 6 லட்சம் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆண்டுக்கு 11 லட்சம் பேர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் 1 லட்சம் பேருக்கு 14 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வளமான நாடுகள் வரிசையில் இருக்கும் அமெரிக்காவில் கூட ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது ஒருலட்சம் பேரில் 12 பேர் தற்கொலை செய்கிறார்கள்.

உலகில் தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது நாட்டில் தற்கொலைக்கான முயற்சிகள் அதிகமாக இருப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன. 120 கோடி மக்களை கொண்ட பெரிய தேசமான நம்நாட்டில் ஆண்டுக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் பேர் இந்த துயர முடிவை எடுக்கிறார்கள். அதிலும் உழைக்கும் திறன் கொண்ட 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் தான் இந்த துயர முடிவை அதிகமாக எடுக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடன் தொல்லை, குடும்ப பிரச்சினை விவசாய வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை என்ற வரிசையில் தற்போது இளம் வயதினரின் தற்கொலை மனிதவள ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாதிப்பதில் தோல்வி, எதிர்பார்ப்பில் ஏமாற்றம் ஆகியவை இளம் வயதினரின் தற்கொலைக்கு முக்கிய காரணங்கள். இவை மட்டுமல்ல, செல்போன் போன்ற தொழில் நுட்பங்கள், சமூக வலைத்தளங்கள், மோசமான வலைத்தளங்கள் போன்றவையும் இவர்களின் தற்கொலைக்கு காரணங்களாக அமைகின்றன.

தற்கொலை செய்வோரில் 60 சதவீதம் பேர், இளம்பெண்கள்; 40 சதவீதம் பேர், ஆண்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிக்க முடியாதது. இந்த உயிர் ஏதாவது ஒரு நற்செயலுக்காகத் தான் படைக்கப்பட்டிருக்கும். அதை வீணாக மாய்க்கக் கூடாது.

இதற்கு நல்ல உதாரணம், சமீபத்தில் மறைந்த கவிஞர் வாலி. இவர் இளமையில் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட போது, தற்கொலை செய்து கொள்ளச் சென்றார். அப்போது ஒரு டீக்கடையில் ‘மயக்கமா கலக்கமா...‘ என்ற கவியரசு கண்ணதாசன் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் வரும் ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை‘ என்ற வரிகள், அவரது தற்கொலை எண்ணத்தை மாற்றின. இதைக் கேட்டு தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, சினிமாவில் கண்ணதாசனுக்கு இணையாக பாடல்கள் எழுதி, மிகப்பெரிய உயரத்திற்கு சென்றவர், வாலி.

No comments:

Post a Comment