Saturday, November 16, 2013

திருவண்ணாமலை மகா கார்த்திகை தீபம்

“சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..
அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை – அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை”
-என்றெல்லாம் போற்றப்படும் திருத்தலம் திருவண்ணாமலை எனப்படும் அருணாசலம்.
அருணாசலம் என்றால் அருணம் + அசலம் .  அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. இது நெருப்பு மலை. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறார்.
இம்மலையின் மிக முக்கிய சிறப்பு இங்கு ஏற்றப்படும் கார்த்திகை தீபத் திருவிழா. இந்தத் திருவிழாவிற்கு ஒரு சுவாரஸ்யமான கதை கூறப்படுகிறது.
கைலாயத்தில் ஈசன் ஏகாந்த தவத்தில் ஆழ்ந்திருந்த போது உமை, ஈசனின் பின்புறமாய் வந்து நின்று விளையாட்டாய் அவர் இரு கண்களைப் பொத்தினாள்.அதனால் உலகம் இருண்டது. ஈசனின் வல, இடக் கண்களான சந்திர, சூரியர்கள் களையிழந்தனர். நெற்றிக் கண்ணாகிய அக்னியும் அன்னையின் கைவிரல் பட்டுக் குளிர்ந்து போனது. அதனால் வேள்விகள் தடைப்பட்டன. யாகங்களும், பூஜைகளும் இல்லாமல் போயின. உலகத்தில் அருள் ஒழிந்தது. இருள் சூழ்ந்தது. உலகங்கள் இருண்டதால் முனிவர்களும், தேவர்களும் அஞ்சினர். மதி மயங்கினர். கடமைகளை மறந்து முடங்கினர். அதனால் உலகம் தன் நிலையிலிருந்து தவறியது.
அடி அண்ணாமலையில் இருந்து…
இதனால் சினம் கொண்டார் ஈசன். உமை விளையாட்டாய் இந்தச் செயலைச் செய்திருந்தாலும் அது மிகப் பெரிய தவறு என்பதால், அன்னையைச் சபித்தார்.
அன்னை அஞ்சி நடுங்கி பிழை பொறுக்குமாறு வேண்ட, “ தேவி, நீ விளையாட்டாகச் செய்தாலும் தவறு, தவறுதான். ஆதலால் நீ பூவுலகம் சென்று தவம் மேற்கொள்வாயாக! தக்க காலத்தில் யாம் வந்து உம்மை ஆட்கொள்வோம்’ என்று கட்டளையிட்டார்.
அன்னையும் அவ்வாறே ஈசனின் கட்டளைப்படி பூவலகிற்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தாள்.  அவ்வாறு அன்னை தவம் செய்து ஈசனின் அருள் பெற்று, சாப நிவர்த்தியான தலம் தான் அண்ணாமலை. சாப நிவர்த்தி மட்டுமல்ல; ஈசனின் உடலில் சரி சமமாக இடப்பாகம் பெற்றாள். அன்னை கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற அந்த நன்னாள் தான் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது ”எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்தார். அதுவே தீபத் திருநாளாக அன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்து வந்த சுடர்காணில்
பசிபிணி இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்
- என இதை அருணாசல புராணம் சுட்டுகிறது.
அம்பாள்
“புத்திதரும் தீபம் நல்லபுத்திரசம் பத்துமுண்டாம்
சித்திதரும் தீபம் சிவதீபம் – சக்திக்கு
உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்
பயிராகும் கார்த்திகைத் தீபம்
- என்கிறது தீப வெண்பா.
அர்த்தநாரீஸ்வரர்
‘குன்றத்து உச்சிச் சுடர்’ என்று சீவக சிந்தாமணி இதன் சிறப்பை விரித்துரைக்கிறது.
”அருணாசலத்தை கார்த்திகை தீபத்தின் போது வலம் வருவது மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லதாகும். அருணாசலத்தில் தீபம் ஏற்றும் போது அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து விட்டுச் செய்யப்படும் கிரிவலத்தினால் அதுவரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும். கிரிவலத்தினை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து செய்வது அவன் அதுவரை செய்த அனைத்து பாவங்களையும் நீக்கி அவனை பரிசுத்தனாக்க வல்லது. பதினோரு நாட்கள் தொடர்ந்து செய்யும் கிரிவலம் அவனுடைய வினைகளை நீக்கி, ஸகல ஸம்பத்துக்களையும் கொடுக்கும். கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செய்பவனோ ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனை அடைகிறான். தீபத்தன்று சிவலிங்கத்தின் முன்னால் நெய் விளக்கு ஏற்றுபவன் வாழ்க்கை ஒளிரும். தீவினைகள் அகலும். அந்த தீபத்தை வலம் வருவனின் ஒவ்வொரு அடிக்கும் அஸ்வமேத யாகம் செய்த பலனுண்டு. சகல தானம் கொடுப்பதால் ஒருவனுக்கு என்ன பலன் வருமோ, சகல தீர்த்தங்களில் நீராடினால் ஒருவனுக்கு என்ன பலன் வருமோ அது, கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்தாலே கிடைக்கும். கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நஷத்திரத்தில் சோணாசல ஷேத்திரத்தில் தீபமேற்றினால் சந்தான ப்ராப்தி உண்டாகும்.”
- என்றெல்லாம் அருணாசலத் தலவரலாறு மிகச் சிறப்பாக கார்த்திகை தீபமன்று கிரிவலம் வருவதன் சிறப்பை எடுத்துரைக்கின்றது.
கிரிவலம் வருவோம்!  கர்மவினைகளைக் களைவோம்!!
ஓம் அருணாசலேஸ்வராய நமஹ!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
 கண்ணார் அமுதக் கடலே போற்றி

No comments:

Post a Comment