Sunday, September 1, 2013

எப்போ வயசாகும்?"


"என்னங்க... தூங்கிட்டீங்களா?"

அந்த மெல்லிய விளக்கொளியில், மகனுக்கு தட்டிக் கொடுத்துக் கொண்டே கணவனின் காதைக் கடித்தாள்.

"இல்லம்மா. என்ன விசயம் சொல்லு?"

"இல்லீங்க. இந்த ஊரு எனக்கு சுத்தமா பிடிக்கலீங்க. சென்னை பக்கமா போயிடலாங்க."

"எனக்கும் ஆசைதான். ஆனா, சென்னையில வீடு வாங்குறது சாதாரண விசயமா? அதுவும் இல்லாம ஏதாவதொரு பிசினஸ் பண்ணாதான் பொழப்ப ஓட்டமுடியும். அதுக்கெல்லாம் பணம் வேணும்ல?"

"நாம ஒன்னும் சென்னையிலேயே வாங்க வேண்டியது இல்லீங்க. அவுட்டர்ல பார்த்து வாங்குவோங்க."

"சரி... அதுக்குக் கூட காசு வேணும்ல?"

"இங்க உங்களுக்கு இருக்கிற வீடு, தோட்டம், தொறவெல்லாம் வித்திட்டு, அந்த பணத்த வச்சு வாங்குவோங்க."

"விக்கலாம். ஆனா அது எல்லாம் அப்பா பேர்ல இருக்கே. எப்படி விக்கிறது? அப்பாவுக்கு பிறகுதானே எனக்கு கிடைக்கும்."

"உங்க அப்பா இந்த 70 வயசிலேயும், கல்லு கணக்கால்ல இருக்காரு. அவரு எப்ப போறது நாம எப்போ வாங்குறது? ம்க்கும்..."

"அதுக்கு என்ன பண்றது? பொறுத்துதான் ஆகனும். இது எல்லாம் அவர் உழச்சு சம்பாதிச்ச சொத்தாச்சே"

"அதுக்குத்தான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். உங்களுக்கு ஓகேன்னா, நான் சொல்றேன். என்மேல கோவப்படக் கூடாது. ம்ம்ம்... சரியா?"

"ம்ம்ம்... வெவகாரமாத்தான் எதயாவது யோசிச்சிருப்ப. சரி சொல்லு"

"நான் எனக்காக சொல்லலீங்க. நமக்காக சொல்றேன். நம்ம புள்ளயோட எதிர்காலத்துக்காக சொல்றேன்."

"சரி, சரி, சுத்தி வளைக்காம சொல்லு"

"உங்க அப்பாவுக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்குல்ல. அதிலும் எச்சிலைத் தொட்டுத் தொட்டு பக்கத்த திருப்புற பழக்கம் இருக்கு. நாம அந்தப் பக்கத்துல எல்லாம் விஷத்த தடவி வச்சிட்டோம்னா, அது ஸ்லோ பாய்சனாகி அவர் போய் சேர்ந்துடுவாரு. யாருக்கும் சந்தேகமும் வராது. என்ன சொல்றீங்க?"

"அடிப்பாவி... ஏன்டி உன்புத்தி இப்படி போவுது?"

"அவருதான் எல்லாத்தயும் ஆண்டு அனுபவிச்சிட்டாருல்ல.70 வயசாயிடுச்சு. இனிமேல் இருந்தா என்ன? போனா என்ன?"

"பேசாம தூங்கு. அப்புறம் பாத்துக்கலாம்"

"இந்த மனுசன் எப்பவும் இப்படித்தான். வழவழ கொழகொழ பார்ட்டி" முனகிக்கொண்டே தூங்கிப் போனாள்.

காலையில் எழுந்து மகனை பள்ளிக்கு கிளப்பிக் கொண்டிருந்தாள்.

சட்டையைப் போட்டுவிட்டுக் கொண்டிருந்த தாயிடம் மகன், "அம்மா, அப்பாவுக்கு எப்போ 70 வயசாகும்?"

"அதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு ராசா. ஏன் கேட்கற?"

"விஷம் வைக்கத்தான்..."

அவள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அவன் உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பினான்.


- Boo Pathi.

No comments:

Post a Comment