Saturday, September 21, 2013

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 5–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

உடன்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 5–ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தசரா திருவிழா

தமிழ்நாட்டில் நடைபெறும் தசரா திருவிழாக்களில் முதலிடம் வகிப்பது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவாகும். இந்திய அளவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடித்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுவார்கள்.

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 5–ந்தேதி (சனிக்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 8 மணிக்கு கோவிலின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். தொடர்ந்து கொடிமரத்துக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

காப்பு கட்டும் நிகழ்ச்சி

இதைத் தொடர்ந்து விரதம் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள். அங்குள்ள பூசாரி, பக்தர்களுக்கு காப்பு என்ற மஞ்சள் கயிறு கட்டுவார். தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் தாங்கள் நேர்ச்சை செய்த வேடங்களை அணிவார்கள். பின்னர் பல்வேறு ஊர்களுக்கு சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள். 10–ம் திருநாளான 14–ந்தேதி (திங்கட்கிழமை) பக்தர்கள் வசூல் செய்த பணம், பொருட்களை கோவிலில் காணிக்கையாக செலுத்துவார்கள்.

திருவிழா நாட்களில் தினமும் மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். மாலையில் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

சூரசம்ஹாரம்

வேடம் அணிந்த பக்தர்கள் தங்களது ஊர் பெயரில் தசரா குழுக்கள் அமைத்து நையாண்டி மேளம், கரகம், காவடி, குறவன், குறத்தி, கிராமிய கலைகள், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பல்வேறு ஊர்களில் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள். இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டம் முழுவதும் தசரா திருவிழா களைகட்டும்.

10–ம் திருநாளான 14–ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் அனைத்து தசரா குழுக்களும், வேடம் அணிந்த பக்தர்களும், பொதுமக்களும் கோவிலுக்கு வரத் தொடங்குவார்கள். இதனால் குலசேகரன்பட்டினம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரைக்கு எழுந்தருள்வார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்கள் அனைவரும் அம்மனை பின்தொடர்ந்து அணிவகுத்து செல்வார்கள். பின்னர் கடற்கரையில் மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

காப்பு அவிழ்ப்பு

15–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மாலை 5 மணியளவில் அம்மன் கோவிலுக்கு திரும்பி செல்வார். கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனின் காப்பு அவிழ்க்கப்படும். அதைத் தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களுக்கு காப்பு அவிழ்க்கப்படும். பின்னர் பக்தர்கள் தங்களது வேடங்களை கலைந்து விடுவார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும்.

No comments:

Post a Comment