Tuesday, September 17, 2013

வீடு கட்ட சில அடிப்படை விதிகள்..!

வீடு கட்ட சில அடிப்படை விதிகள்..!

மனையில் வீடு கட்டுறதுக்கு சில அடிப்படை விதிகள் இருக்கு. நீங்க இருக்கும் ஏரியாவைப் பொறுத்து அந்த விதிகள் மாறும்.

உள்ளாட்சி விதிமுறைகள்..!

நீங்கள் அரைகிரவுண்டு அதாவது 1,200 ச.அடி மனை வாங்கினா, அது மொத்தத்துக்கும் வீடு கட்டமுடியாது. உள்ளாட்சி சட்டத்தில் அதுக்கு அனுமதி கிடையாது. நாலுபக்கமும் இடம் விட்டு நடுவிலேதான் வீடு கட்டணும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விடணும்ங்கறது இடத்துக்கு ஏத்த மாதிரி மாறுபடும்.

உதாரணத்துக்கு, நகராட்சி பகுதின்னா மொத்தப் பரப்பளவில் நாலில் ஒரு பகுதியை காலியா விடணும். அதேமாதிரி, சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் 30 அடி, அதுக்குக் குறைவான அகலம் உள்ள ரோடு பக்கத்தில் உள்ள மனையில் வீடு கட்டுனா, ரோட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் குறைஞ்சது அஞ்சு அடி இடைவெளி இருக்கணும்.

மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விடணும்ங்கறது மனையின் அளவைப் பொறுத்தது. மனையின் நீளம் 50 அடியோ அதுக்கும் குறைவாவோ இருந்தா, பின்பக்கம் 5 அடி விடணும். 50 அடிக்கு மேல் 100 அடிவரைன்னா, 10 அடியும், 100 முதல் 150 அடின்னா 15 அடியும் விடணும். அதேமாதிரி வீட்டுக்கு ரெண்டு பக்கமும் 5 அடி விடணும். மனையைச் சுத்தி இடம் விடச் சொல்றது வண்டி நிறுத்த... நல்ல காத்தோட்டமா இருக்கறதுக்கு, மரம் செடி வளர்க்க... இதுக்காகத்தான்.

உதாரணம் சொல்லவா?!

மனைக்கு முன்னால் 30 அடி ரோடு, மனை அளவு நீளத்தில் 40 அடி, அகலத்தில் 30 அடின்னா மொத்தமுள்ள 1,200 சதுர அடியில் முன்பக்கம் 5 அடி, பின்பக்கம் 5 அடி, ரெண்டு சைடிலும் தலா 5 அடி விட்டது போக மீதியுள்ள இடத்தில்தான் வீட்டைக் கட்டமுடியும். அதாவது 600 (20 x 30) அடியில்தான் வீடு கட்டமுடியும். மனையோட மொத்தப் பரப்பளவில் 50% மட்டும்தான் கட்டடம் கட்டுறதுக்கு அனுமதி கிடைக்கும். மனையின் பரப்பு கூடுதலாகும்போது நாம கட்டுற இடத்தின் அளவும் கூடும். 2,400 (60 x 40) ச.அடி. மனையில் 1,350 (45 x 30) ச.அடி. பரப்பில் கட்டலாம்.


முதல் தளம் கட்டும்போது...

இந்தக் கணக்கு எல்லாமே தரைத் தளத்துக்கு மட்டும்தான். நீங்க மாடி கட்டணும்னா அதுக்கு தனிக் கணக்கு இருக்கு. எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்)னு ஒரு விதி இருக்கு. அதன்படிதான் கட்டணும். ஒரு கணக்கு பாருங்க... 2,400 சதுர அடி பரப்பளவு உள்ள மனையில் தரைத்தளத்தில் 1,350 சதுர அடிக்கு கட்டுறீங்க. முதல் மாடி கட்டும்போது 1,600 ச.அடிக்கு (ஜன்னல், பால்கனி சேர்த்து) கட்டலாம்.

தனி வீடு கட்டும்போது...

எவ்வளவு பரப்பளவில் வீடு கட்டலாம்னு முடிவு செய்துட்டீங்கன்னா, அடுத்து வீடு கட்டுறதுக்கு என்ன செய்யணும்னு பார்த்துடலாம். முதலில் உங்க மனையின் அளவைச் சொல்லி, வீடு கட்டும் பிளானைக் கொடுத்து உங்க பகுதி உள்ளாட்சி அமைப்புகிட்டே அனுமதி வாங்கணும். வீடு கட்டும் பிளானை அதுக்குனு அங்கீகாரம் பெற்ற இன்ஜினீயர்கிட்ட வரைஞ்சு வாங்கி, மூணு நகல் எடுத்து விண்ணப்பத்தோடு சேர்க்கணும். மழை நீர் சேமிப்புக்கான வசதி பண்ணித்தான் பிளான் போடணும். அப்போதான் அப்ரூவல் கிடைக்கும்.

வீட்டின் மொத்தப் பரப்பு, அறைகளின் எண்ணிக்கை எவ்வளவோ, அதுக்கு ஏத்த மாதிரி கட்டணம் விதிப்பாங்க. அதைக் கட்டி அப்ரூவலை வாங்கணும். அந்த அப்ரூவல் கிடைக்க குறைஞ்சது ஒரு மாசமாவது ஆகும். அது கிடைச்சதும் கட்டுமான வேலையை ஆரம்பிச்சுடலாம். என்ன பிளானைக் கொடுத்து அப்ரூவல் வாங்கினோமோ அதன்படி வீடு கட்டுறதுதான் நல்லது. சொல்றது ஒண்ணு, செய்யறது ஒண்ணுனு இருந்தா... பின்னாடி விற்கும்போதோ, வங்கியில் லோனுக்குப் போகும்போதோ பிரச்னை வரும்.

கரன்ட் கனெக்ஷன் வாங்கறதுக்கு அந்த ஏரியாவில் இருக்கும் மின்வாரிய ஆபீஸில் மனையோட பத்திர நகலை வெச்சு அப்ளிகேஷன் கொடுக்கணும். அப்போ அங்கீகாரம் பெற்ற எலக்ட்ரீஷியன் ஒருவரின் சான்றிதழோடு, பிளான்படி எங்கெல்லாம் மின் இணைப்புக்காக குழாய்கள் பதிக்கப்போறோம்ங்கற விவரங்களையும் சொல்லணும். சிங்கிள் பேஸா, டிரிபிள் பேஸாங்கறதைப் பொறுத்து டெபாசிட் கட்டச் சொல்வாங்க. அதிகபட்சம் ஒரு வாரத்தில் கனெக்ஷன் குடுத்துருவாங்க. மளமளனு கட்டி முடிக்க வேண்டியதுதான்!

No comments:

Post a Comment