Monday, September 22, 2014

கண் தானம் பற்றிய உண்மைகள்:-

கண் தானம் பற்றிய உண்மைகள்:-
 
தானத்தில் சிறந்தது கண் தானம்.. படிப்பறிவிற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் கண் தானம் செய்வதில் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கண்தானத்தை பற்றிய சில உண்மைகளையும், விளக்கங்களையும் நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
மனிதன் செய்யும் தானங்களில் மிகவும் சிறந்தது கண்தானம் தான். ஏனென்றால் இறந்த ஒருவரிடமிருந்து பெறப்படும் 2 கண்களால் பார்வையில்லாமல் இருக்கின்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.
கண் பார்வையின் அத்தியாவசியத்தை ஏற்படுத்திய இறைவன், அதை நாம் இழந்து விட்டால், அதை மாண்டவர் மூலம் மீண்டும் பெற வழியையும் வைத்திருக்கிறார். இந்த அற்புத வசதியை நாம் உபயோகித்து கொள்ளாவிடில் இழப்பு மனித சமுதாயத்திற்கே. இயற்கை படைப்பின் இந்த அதிசயத்தை அறிந்து மனித சமுதாய மேம்பாட்டிற்கு இதை உபயோகிப்பது மிகவும் இன்றியமையாததாகும். நம்முடைய உடல் உறுப்பு ஏதேனும் பழுதடைந்து விட்டால் அதே போன்ற வேறு உறுப்புகளை வாங்கி பொருத்திக்கொள்ள முடியாது. மறைந்தவரின் காது, மூக்கு, கை, கால், மூளை மற்றும் எதையும் வேறு யாரும் உபயோகிக்க முடியாது. ஆனால் அவரது கண்களை மட்டும்வேறு இருவருக்கு உபயோகித்துக்கொள்ள முடியும்.
கண்தானம் செய்வது மிகவும் எளிது. ஒருவர் தன் மறைவிற்கு பின்னர் தன் கண்களை தானமாக கொடுக்க விரும்பினால் அருகாமையில் உள்ள கண் வங்கியில் கண் தான விண்ணப்ப படிவத்தை வாங்கி, அதனை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அவரது பதிவுஎண், கண் வங்கியின் விலாசம், தொலைபேசி எண், கண்தான விளக்க கையேடு போன்றவை கண் வங்கியினரால் விண்ணப்பதாரருக்கு கொடுக்கப்படும். இதனை பெற்று கொண்ட பின்னர் கண்தானம் செய்யும் தனது விருப்பத்தை நெருங்கிய உறவினரிடமும், நண்பர்களிடமும், தெரிவிக்க வேண்டும். கண் வங்கியிலிருந்து பெறப்பட்ட கண் வங்கி விலாசம், தொலைபேசி எண் கொண்ட அடையாள அட்டை எல்லோருக்கும் தெரியும்படி மாட்டிவைக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்தவர் மறைந்த உடன் உடனடியாக கண் வங்கிக்கு உறவினர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்த 6 மணி நேரத்திற்கு கண்களை தானம் செய்தால்தான் அதை பிறருக்கு பயன்படுத்த முடியும். தாமதமாக வந்து கண்களை பெறுவதில் 6 மணி நேரத்திற்குள் மேல் தாமதம் ஏற்பட்டாலோ அது பயனற்று போய்விடும்.
நீங்கள் இருக்கும இடத்தில் கண் வங்கி இல்லாவிட்டால் அருகில் உள்ள மருத்துவரிடம் உங்கள் விருப்பத்தை கூறினால் கண்தானத்திற்கான ஏற்பாட்டை அவரே செய்வார். உயிலின் மூலம் கண்தானம் செய்வதை தவிர்ப்பது நல்லது. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது. கண் வங்கி மூலம் கண்தானம் செய்வதே உபயோகமானது.
கண் எனும் உறுப்பு நமக்கு இறைவன் தந்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். அதன் மூலமாகதான் இயற்கையை நம் குடும்பத்தவரை அன்பானவர்களை உலகத்தை பார்க்கிறோம். தெரிந்து கொள்கிறோம். இதனை அத்தியாவசியமாக உள்ள உறுப்பாக கண்களை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டியது மிக மிக இன்றியமையாததல்லவா?
இனிமேலாவது நம் கண்களை நன்கு பராமரிப்போம். பாதுகாப்போம். இறந்த பின்னர் மனித உடலிலிருந்து மனிதனுக்கு பயன்படக்கூடிய கண்களை தானம் செய்து மற்றவர்களுக்கு உதவியாக இருப்போம்.
மண்ணுக்குள் மக்கும் கண்கள், மனிதனுக்கு பயன்படட்டும்..

No comments:

Post a Comment