Wednesday, July 23, 2014

யோகாசனம்,....

30 வயதைத் தாண்டினாலே நம் நரம்புகளுக்குள் மெல்லிய பதட்டம் ஊடுருவத் தொடங்குகிறது. அண்டை வீட்டுக்காரர், அலுவலக நண்பர்கள், எப்போதேனும் சந்திக்க நேர்கிற பால்யகால நண்பர்கள் என யாருக்கேனும் ஷ§கரோ பி.பி.யோ இருந்தால், உடனே அவரை நம்முடன் ஒப்பிடத் தொடங்குகிறோம். ஒருபுறம் வாய்க்கு ருசியான உணவுகளை உண்ணத் துடிக்கிற நாக்கு,.. இன்னொருபுறம் சுற்றியுள்ள சூழலில் பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் நம் ஆரோக்கியம் குறித்த அச்சம்... இரண்டுக்கும் இடையில் அல்லாடிப் போகிறோம்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவது என்பது அத்தியாவசியக் கடமைகளில் ஒன்றாகிவிடுகிறது. ஆனால், இப்படி நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதைவிட, கொஞ்சம் மெனக்கெட்டு, அதே உடலை யோகாசனம் செய்யப் பழக்கப்படுத்தினால் மருத்துவச் செலவும் மிச்சம். மன உளைச்சலும் இல்லை. இதற்காகத் தனி இடம் தேடி அலையவேண்டியதும் இல்லை.

எளிய பயிற்சிகளைச் செய்யுங்கள்.
இனிய வாழ்க்கைக்கு மாறுங்கள்!
இனியெல்லாம்... 'யோக'மே!

டிப்ஸ்:

= முதலில் இந்த யோகா சனப் பயிற்சிகளை செய்யும்போது சற்று தடுமாற்றமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து தினமும் செய்யும்போது, எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடல் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறும்.

= குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ, யோகாசனம் செய்யலாம்.

= உணவு உண்ட பிறகு யோகாசனம் செய்யக் கூடாது. காலை உணவு, சிற்றுண்டிக்குப் பிறகு 21/2 மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு, 4 மணி நேர இடைவெளிதந்து யோகப் பயிற்சி செய்யலாம்.

= ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உடலைத் தளர்த்தும் பயிற்சிக்குப் பிறகே ஆசனங்களைத் துவங்க வேண்டும்.

= ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடலைத் தளர்த்துவது மிக அவசியம். ஆசனங்களின் உச்ச நிலையிலும் எல்லா இறுக்கங்களையும் அகற்றவும். ஓர் ஆசனத்துக்கும் அடுத்த ஆசனத்துக்கும் இடையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.

= சுலபமாகக் கால்களை, கைகளை அசைப்பதற்கு வசதியாக உள்ள பருத்தி ஆடைகளை உடுத்துதல் நலம்.

= எந்த ஓர் ஆசனம் செய்த பிறகும், செய்பவர்களின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகமாகவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ வியர்த்தோ போகக் கூடாது.

 
 

 சுவாசப் பயிற்சிகள்!

யோகாசனப் பயிற்சிகளுக்கு முன்பு செய்யப்படும் சுவாசப் பயிற்சிகள் உங்கள் படபடப்பைக் குறைக்கும்.

இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நம் உடலின் ஒவ்வொரு பாகத்தின் அசைவையும் உணர முடியும்.

(1) கைகளை, உள்ளும் வெளியுமாக அசைத்துச் செய்யும் சுவாசப் பயிற்சி

பயிற்சி முறை:

நேராக நிமிர்ந்து நின்று கைகளை முன்னால் நீட்டிக்கொள்ளவும்.

மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை அகட்டி, மார்பை விரிக்கவும்.

பின்பு மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்கு வரவும்.

10 முதல் 15 முறை மெதுவாகச் செய்ய வேண்டும்.

(2) கைகளை நீட்டிச் செய்யும் சுவாசப் பயிற்சி

பயிற்சி முறை:

நிமிர்ந்து நிற்கவும்.
கை விரல்களை கோத்துக்கொண்டு நிற்க வேண்டும்.
மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை முன்னே நீட்டவும்.
உள்ளங்கைகள் வெளியே பார்த்தபடி, கைகளை இழுத்து நீட்டவும்.
மூச்சை வெளியேவிட்டபடி, பழைய நிலைக்கு வரவும். 10 முறை இதேபோல் செய்யவும்.
இதேபோல் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி, பிறகு கீழே கொண்டு வரவும். மூச்சை உள்ளிழுத்து, மேலே உயர்த்தி மூச்சை வெளிவிட்டுக் கீழே இறக்கவும்.

(3) கணுக்கால்களை உயர்த்திச் செய்யும் சுவாசப் பயிற்சி

பயிற்சி முறை:

நேராக நின்று மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை மேலே உயர்த்தவும். அதேநேரத்தில் குதிகால்களை உயர்த்தி கால் விரல்களில் நிற்கவும்.
மெதுவாக மூச்சை வெளியே விட்டபடி கைகளைக் கீழிறக்கும்போதே, குதிகால்களையும் கீழே வைத்து சமநிலைக்கு வரவும்.

No comments:

Post a Comment