Sunday, January 18, 2015

இதைக் கேட்டால் நீங்களும் பெரியமனுசனே...!

மன்னிப்பு என்ற வார்த்தை சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதற்கும் கொடுப்பதற்கும் இரு பரந்த மனசு வேண்டும்.பெரிய பெரிய பிரச்சனையைக் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டுவரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு.
தெரியாமல் தவறு செய்யும்போது  மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொள்வது.
மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்- என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். இன்றைய சூழலில் அப்படிப்பட்ட சூழல் காணக்கிடைப்பது அரிது. ஈகோ, பிடிவாதம், வாக்குவாதம், புரிதலின்மை போன்ற பல விஷயங்களால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது.
பலருக்கு தான் செய்தது தவறென்று தெரிந்தும் அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம் கொடுப்பதில்லை. என்னதான் நண்பனாக, சொந்தக்காரனாக, , கணவன,மனைவியாக இருந்தாலும் வாக்குவாதங்களில் இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, அதை ஏற்றுக்கொள்வதிலோ இருப்பதில்லை.
உதாரணமாக, வகுப்பில் ஒரு மாணவன் எதையாவது பொய் சொல்லிவிட்டு விட்டு அதை அவன் உணர்ந்து மன்னிப்பு கேட்கும்போது  இனி இப்படி செய்யக்கூடாதென்று அறிவுறுத்தி அதை மன்னித்து விட்டுவிட வேண்டும்.
அதைவிடுத்து அன்றிலிருந்து அவன் என்ன சொன்னாலும் பொய்யாக இருக்கும் என்று சந்தேக கண்ணோடு பார்க்கக் கூடாது. இந்த நோக்கு அவனை மீண்டும் பொய் சொல்ல தூண்டுமே தவிர ஒருபோதும் திருத்தாது.
நம்மில் பலர் இந்தத் தவறினை செய்கிறோம். கேட்கப்படும் மன்னிப்பை தற்காலிகமாக வழங்கிவிட்டு, மனதில்  அவர் செய்த தவறினை நினைத்துக்கொண்டே இருக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் அதை சொல்லிக்காட்டி குத்திக்கொண்டே இருப்பது இதுபோன்றவர்களின் வழக்கம். 
இது வெளியாட்களுக்கிடையே நடக்கும்போது ஏற்படும் பாதிப்பை விட, நேசிப்பவர்களுக்கிடையே நடக்கும் சந்தர்ப்பங்களில், அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே ஒரு முறை மன்னித்த தவறை அடுத்து நாம் மறந்துவிட வேண்டும்.
அதையே ஒவ்வொருமுறையும் நினைவுபடுத்தி தன்னையும் வருத்தி, சம்மந்தப்பட்டவரையும் வருத்தப் பட வைக்க வேண்டாம்.
எனவே, மறப்போம் மன்னிப்போம்...

1 comment: