உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலனவர்கள் இன்றைக்கு உடலை குறைப்பதற்காக கூறும் வார்த்தை டயட்டில் இருக்கிறேன் என்பதுதான். டயட் என்றவார்த்தை இப்பொழுது ஒரு பேஷனாகிவிட்டது. ஆனால் டயட் என்ற பெயரில் உடலைபோட்டு வருத்தக்கூடாது என்பதுதான் உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை. தொப்பை அதிகமாவிட்டதா? குண்டு உடலை குறைக்கவேண்டுமா? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.
குறைந்த கலோரி உணவுகள்
கண்டதையும் சாப்பிட்டு உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வதை விட குறைந்த கலோரி உள்ள உணவுகளையே உட்கொள்ளவேண்டும். அதேசமயம் பட்டினி கிடந்து உடலை வருத்த வேண்டாம். இதனால் உடல் பலகீனமடைந்துவிடும். எக்காரணத்தைக் கொண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டாம் என்பது உணவியல் நிபுணர்களின் அறிவுரை.
பருவநிலை பழங்கள்
தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
அந்தந்த கால நிலைகளில் கிடைக்கும் பழங்கள் காய்கறிகளை தவறாமல் உட்கொள்ளவேண்டும். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
இஞ்சி சாறு
இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.
வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.
பலன் தரும் பப்பாளி
முள்ளங்கியை சாம்பார், கூட்டு செய்து உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்தும் சாப்பிடலாம்.
உடல் பருமனை தடுக்க
மூன்று நேரமும் அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்வதை விட ஆறுவேளை குறைந்த அளவு உணவுகளை எடுத்துக்கொள்ளவும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தவும். இது அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க உதவும்.
உங்களுக்கு பிடித்த உணவு என்பதற்காக அதிக அளவில் சாப்பிட வேண்டாம். இதுவே உடலை குண்டாக்கும். நாவை கட்டுப்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தை பேணலாம் என்பதே உணவியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.
No comments:
Post a Comment