Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Saturday, October 4, 2014

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ...

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ...
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.
01. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
02. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
03. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
04. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
05. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல
06. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
07. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.
08. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.
09. கஷ்டம் தான் … ஆன முடியும்.
10. நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.
11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?
12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.
15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
19. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.
20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே.குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.
25. ஆகா, இவனும் அயோக்யன் தானா?சரி,சரி.இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.
26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?
27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?
31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.
32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?
ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். ஒன்பது முறை விழுந்தவனுக்குஇன்னொரு பெயர் உண்டு-. எட்டு முறை எழுந்தவன். எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.
 

Wednesday, July 23, 2014

(வண்ணத்துப் பூச்சி)



கூட்டுப்புழுவில் ஒரு நாள், ஒரு சிறிய துவாரம் தென்படத் துவங்கியது. அந்தச் சிறிய சந்திலிருந்து அந்த வண்ணத்துப் பூச்சி வெளிவரப் போராடிக் கொண்டிருப்பதை ஒரு மனிதன் மிக நீண்ட நேரமாய் கவனித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று சலனங்கள் மறைந்து போனது. அது தன்னால் இயன்றவரை போராடியும், அதனால் முடியாமல் போய், நிறுத்தி விட்டதாக அவனுக்குத் தோன்றியது.

அவன் அந்த பூச்சிக்கு உதவ நினைத்து, ஒரு கத்தரியை எடுத்து அதன் துவாரத்தை சற்று பெரிதாக்கினான். இப்போது இந்த வண்ணத்துப் பூச்சி சுலபமாக வெளியில் வந்தது. ஆனால் அதன் உடம்பு சிறுத்து, உலர்நது போய், இறக்கைகள் வளர்ச்சியற்று வீணாகி இருந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் அதன் இறக்கைகள் வளர்ந்து விரிந்து அந்த வண்ணத்துப்பூச்சியின் உடலைத் தாங்கும் வண்ணம் செம்மையாவதைப் பார்ப்பதற்காக அந்த மனிதன் அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

எதுவும் நடக்கவில்லை. உண்மையில் அந்த வண்ணத்துப்பூச்சி தன் எஞ்சிய வாழ்நாளை பறக்க முடியா இறக்கைகளுடன், உலர்நத உடம்புடன், ஊர்ந்தே வாழ நேரிட்டது.

அந்த பூச்சி, அந்த கடினமான சிறிய துவாரத்திலிருந்து, முறைப்படி, சிறிது சிறிதாக போராடி வருவதே, இயற்கையான வழியில், அதன் உடம்பிலும், இறக்கையிலும் தேவையான பலத்தை பெற்றுத் தந்து, அது கூட்டிலிருந்து சுதந்திரமாய் வெளியேறி பறக்க உதவும் என்பதை அம்மனிதன் தன் இரக்க குணத்தினாலும் நேசத்தினாலும் அறிந்திருக்கவில்லை.

சில நேரங்களில் போராட்டங்கள் வாழ்வுக்கு மிகவும் அவசியமானது. எந்தத் தடைகளுமில்லாமல் வாழ்நாளை நாம் பழகியிருந்தால், அதுவே பின்னாளில் நம்மை முடக்கி விடும். தடை தாண்டத் தெரியாமல் தடுமாற்ற மேற்பட்டு, வாழ்வில் பறக்க வியலாது.

நான் பலத்தை வேண்டினேன்.
நான் பலம் பெற உதவியாக, சிரமங்கள் தரப்பட்டது.

நான் அறிவை வேண்டினேன்.
எனக்குச் சோதனைகள் தரப்பட்டு, தீர்க்க அறிவுறுத்தப்பட்டது.

நான் செழிப்பை வேண்டினேன்.
எனக்கு மூளையும், உடல் வலிவும் தரப்பட்டு, உழைக்க ஏவப்பட்டது.

நான் துணிவை வேண்டினேன்.
எனக்குத் தடைகள் தரப்பட்டு, தாண்டச் சொன்னது.

நான் அன்பை வேண்டினேன்.
வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைக் காட்டி, அவர்களுக்கு உதவச் சொன்னது.

நான் உதவி வேண்டினேன்.
எனக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது.

நான் கேட்ட எதுவுமே எனக்கு கொடுக்கப்படவில்லை - ஆனால்
எனக்குத் தேவையான அனைத்தையும் நான் பெற்றுக் கொண்டேன்.

வாழ்க்கையை பயமின்றி வாழுங்கள். எல்லா தடைகளையும் துணிவோடு எதிர் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் அதைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

Thursday, March 6, 2014

"வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை!"

ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும்,
அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்.

கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை.

தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.

எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.

"வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை!"
என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.

Thursday, September 26, 2013

ஆகாயத்தில் பரந்துகொண்டிடிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரிய தொடங்கியது
பயணிகள் பீதியில் அலறினார்கள் ஒரு குழந்தை மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது

ஒரு மணி நேர போராட்டத்துக்குபின்பு விமானம் பத்திரமாக தரை இறங்கியது அப்போது ஒருவர் அந்த குழந்தையிடம் கேட்டார்
இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படியம்மா சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருக்க முடிந்தது ?

குழந்தை சொன்னது ..

எங்க அப்பா தான் இந்த விமானத்தின் பைலட் அவர் என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று எனக்கு தெரியும் ..

பெண்பிள்ளையை பெற்ற அப்பாவுக்கு தான் தெரியும் மகளுடைய பாசம்.

Sunday, September 1, 2013


கிழிந்த நோட்டு...

புதிய நூறு ருபாய் நோட்டு தான்......ஆனால், பாக்கெட்டில் போடும்போதோ, எடுக்கும்போதோ எப்படியோ கிழிந்துவிட்டிருந்தது ..'மாசக் கடைசி, செலவுக்கு நெருக்கடியாக இருக்கிறது...எப்படியாவது இதை மாற்றியாக வேண்டுமே...' என்று சிந்தித்த எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது இட்லிக் கடை பாட்டிதான்...
'பாட்டிக்கு சற்று மங்கலாகத்தான் கண் தெரியும். கொடுத்த பணத்தை அப்படியே வாங்கிப் போட்டுக் கொள்ளும் அவரை ஏமாற்றுவது சுலபம்'. என்று நினைத்தேன்.
கிழிந்த இடத்தை செலபான் டேப் போட்டு ஒட்டி எடுத்துக் கொண்டு, பாட்டியின் கடைக்குப் போனேன்..நான்கு இட்லி, இரண்டு தோசை சாப்பிட்டேன். அந்த நூறு ருபாய் நோட்டை எடுக்கப் போனபோது, இன்னொருவன் கொடுத்த ஐம்பது ருபாய் நோட்டை என்னிடம் நீட்டினாள் பாட்டி.
"தம்பி, இந்த நோட்டு நல்லா இருக்கான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுப்பா....கண்ணு சரியா தெரியாததால, நிறைய பேர் கிழிஞ்ச நோட்டையும் , செல்லாத பணத்தையும் கொடுத்து ஏமாத்திடறாங்க...வயித்துக்கு சாப்பிடுற விஷயத்துல ஏமாத்தறவங்க உருப்படுவாங்களா, சொல்லு?..பார்க்கறதுக்கு நல்லவன் மாதிரி தெரியறே....அதான் உன்னை நம்பி பார்க்கச் சொல்றேன்!!"
எனக்கு செருப்பால் அடி வாங்கின மாதிரி இருந்தது..
"நல்ல நோட்டுதான் பாட்டி...." என்றவன், நான் சாப்பிடதற்குப் பணம் கொடுத்துவிட்டு வந்தேன் வேறு நல்ல நோட்டை!!..

Friday, August 23, 2013

உண்மை அன்பு எங்கு இருக்கிறதோ , அங்கே அளவு கடந்த நம்பிக்கையும் இருக்கிறது..!




ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.தந்தை சொல்கிறார் " என் கையை கெட்டியமாக பிடித்துக் கொள் மா ", ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது, பத்திரம் மா " என்று.

உடனே,மகள் சொல்கிறாள் அப்பனா "நீங்க என் கைய புடிச்சிகிங்க பா".

இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்று தந்தை கேட்கிறார்.

நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது. நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்கள் பா என்றாள் மகள்.

உண்மை அன்பு எங்கு இருக்கிறதோ , அங்கே அளவு கடந்த நம்பிக்கையும் இருக்கிறது..!