Sunday, February 9, 2014

நோ ஆயில்... நோ பாயில்..!வித விதமான சாலடுகள்...

நோ ஆயில்... நோ பாயில்..!

செய்வதும் சுலபம். சுவைக்கும் குறைவு இல்லை. அதேசமயம், சிந்தாமல் சிதறாமல் காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் அத்தனையும் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல், உடம்பையும் 'ஃபிட்’ ஆக வைத்துக்கொள்ளலாம். இவை எல்லாம் சாலட்டின் ப்ளஸ் பாய்ண்டுகள்! சென்னையில் இருக்கும் 'சஞ்சீவனம்’ உணவகத்துக்குப் போனால் சாதத்துக்குப் பதிலாக வகை வகையாகச் சாலடுகளைத்தான் மீண்டும் மீண்டும் பரிமாறுவார்கள். வித விதமான சாலடுகள் என்பதால் சாப்பிடுகிறவர்களுக்கும் சலிப்பு ஏற்படாது. இந்த உணவகத்தில் பேர் போன மூன்று சாலடுகளுக்கான ரெசிபியை உணவியல் நிபுணர் காயத்ரி கூறிய கருத்துகளுடன் சேர்த்து இங்கே பரிமாறி இருக்கிறோம்.

சூப்பர் சாலடு

தேவை: வெள்ளரிக்காய் - அரைத் துண்டு, எலுமிச்சை - அரை மூடி, தக்காளி - 1, அன்னாசிப் பழம், கேரட் - தலா 50 கிராம், மிளகுத் தூள், உப்பு, தேன் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை: வெள்ளரிக்காய், தக்காளி, அன்னாசிப் பழம், கேரட் இவற்றை நீளவாக்கில் நறுக்கவும். மிளகு, உப்பு சேர்த்துக் கலக்கவும். சில நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு எலுமிச்சம்பழச் சாறுடன், தேனையும் கலந்து கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

வெள்ளரிக்காயை அதிகமாகச் சேர்ப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். கலோரி, நார்ச்சத்து மிக்க அன்னாசிப் பழம், தக்காளி மற்றும் கேரட்டில் இருக்கும் வைட்டமின்களால் உடலுக்குக் கூடுதல் சத்துக்கள் கிடைக்கும். பொதுவாக, காலை உணவில் சாலட் அதிகம் சேர்த்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

கொள்ளு சாலடு

தேவை: வேகவைத்த கொள்ளு - 100 கிராம், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1, மிளகு தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை - அரை மூடி, கொத்தமல்லித் தழை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முந்தைய நாள் இரவே கொள்ளு தானியத்தை நீரில் ஊற வைக்கவும். மறுநாள், அதைச் சூடான வெந்நீரில் வேகவைக்க வேண்டும். பிறகு வெங்காயம், தக்காளி இவை இரண்டையும் பொடியாக நறுக்கி, உப்பு, மிளகுதூள் சேர்த்து சிறிது நேரம் ஊற விடவும். எலுமிச்சம்பழம் பிழிந்துவிட்டு கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

கொள்ளு தானியத்தில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். தக்காளி, வெங்காயம் அதிகம் சேர்ப்பதால் ஆரோக்கியம் சமநிலையில் இருக்கும்.

டாஸ்ட்டு சாலடு

தேவை: வெள்ளரிக்காய், குடமிளகாய் - தலா அரைத் துண்டு, கேரட் - 75 கிராம், தக்காளி - 1, எலுமிச்சம்பழம் - அரை மூடி, மிளகுத் தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை: வெள்ளரிக்காய், கேரட், குடமிளகாய், தக்காளி இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். உப்பு, மிளகுத் தூள் கலந்து சிறிது நேரம் ஊறவிடவும். கடைசியில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. அசைவ உணவுகள் தரக்கூடிய அனைத்துச் சத்துகளும் இதில் அடக்கம். உடலுக்குப் போதிய நீர்ச்சத்து கிடைத்துவிடும். குடமிளகாயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பைக் குறைக்கும். ஆனால், குடமிளகாயைக் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும். தக்காளி மற்றும் எலுமிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின்களும் கூடுதல் சத்துக்களைத் தரும்.

- செ.திலீபன்,
டாக்டர் விகடன்

No comments:

Post a Comment