Monday, April 28, 2014

சிகரெட் பிடிப்பது,உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்..


பொதுவாகவே சிகரெட் பிடிப்பது,உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் எச்சரிப்பது ஒருபுறம் இருக்க, காலையில் எழுந்தவுடன் புகை பிடிப்பது என்பது எமனை எருமை மாட்டில் வரவழைப்பதற்கு பதில் ஏரோபிளேனில் வரவழைத்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்து ஆய்வாளர்கள்.

இது தொடர்பாக அமெரிக்க மருத்துவக் கல்லூரி ஒன்று நடத்திய ஆராய்ச்சியில், காலையில் எழுந்ததும் புகை பிடிப்பதினால் நுரையீரல், கழுத்து மற்றும் தலையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து மிக அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலர்,காலையில் எழுந்ததுமே டாய்லட்டுக்குள் புகுந்துகொள்வார்கள். உள்ளே போய் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால்தான் அவர்களுக்கு காலைக்கடனே கழியும். சிலர் இதனை பெருமையாக வேறு கூறிக்கொள்வார்கள்.

அத்தகைய பீற்றல்காரர்களுக்குத்தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர் மேற்கூறிய மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள்.

இவ்வாறு காலையில் எழுந்ததும் புகைபிடிப்பவர்களது உடலில் நிகோடின் மற்றும் இதர புகையிலை நச்சுகள், மற்ற நேரங்களில் புகை பிடிப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக காணப்படுகின்றன. அத்துடன் புகை பிடிக்கும் மற்றவர்களை விட இவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு மிக அதிகமாக அடிமையாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக அந்நோய் பாதித்த 4,775 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் அனைவருமே காலையில் எழுந்ததும் வழக்கமாக சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவே இருந்துள்ளது தெரியவந்துள்ளதாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ பேராசிரியர்களில் ஒருவரான பென்.

இதேப்போன்றுதான் தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் தாக்கியவர்களுக்கும், மற்ற நேரங்களில் அதாவது காலையில் எழுந்து ஒரிரு மணி நேரம் கழித்து புகை பிடிப்பவர்களைக்காட்டிலும் அதிக நோய் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

மொத்தத்தில்,சிகரெட் பிடிப்பதே உடல் நலத்திற்கு கேடு என்று இருக்கும்போது, காலையில் எழுந்தவுடன் மட்டுமல்லாது நிரந்தரமாகவே புகைபிடிப்பதை கைவிட்டுவிடலாமே!

No comments:

Post a Comment