Sunday, April 13, 2014

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம்:

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம்:-
உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.
காரணங்கள்:-
சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.
அறிகுறிகள்
* ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
* அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
* பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:-
* கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.
* கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.
* சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.
* கால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.
* அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.
* சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்
* செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.
* கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.
* சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
* துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.
* அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.
சேர்க்கவேண்டியவை:-
திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.
தவிர்க்க வேண்டியவை:-
துவர்ப்பு மற்றும் கார உணவுகள்.

No comments:

Post a Comment