Thursday, October 2, 2014

சென்னை வெள்ளை ரிப்பன் மாளிகை பற்றிய வரலாற்று தகவல்-



சென்னை வெள்ளை ரிப்பன் மாளிகை பற்றிய வரலாற்று தகவல்-




சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ரிப்பன் மாளிகைக் கட்டிடம்.
ஆங்கிலேயர் காலத்தைச் சார்ந்த பல கட்டிடங்களும் செக்கச் சேவல் என்று நின்று கொண்டிருக்க இது
மட்டும் பவுடர் போட்ட பெரிய பாப்பா மாதிரி வெள்ளை வெளேரென்று பிரம்மாண்டமாக காட்சி
அளிக்கும் இப்போது சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக பரமர்த்து வேலை நடைபெற்று வருகிறது

சென்னையின் இந்த வெள்ளை மாளிகை உருவான கதையைத் தேடிப் போனால் அது 1688இல் போய்
நிற்கிறது. அப்போதுதான் இந்தியாவின் முதல் மாநகராட்சியாக மெட்ராஸ் மாநகராட்சி
உதயமானது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைவராக இருந்த சர் ஜோசய்யா சைல்ட் என்பவரின்
மூளையில் உதித்த யோசனைதான் இது. உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கென்றே ஒரு தனி
அமைப்பு தேவை என்று அவர் கருதினார். இது குறித்து அப்போது இங்கிலந்தை ஆட்சி செய்த
மன்னர் இரண்டாம் ஜேம்சிடம் அவர் எடுத்துக் கூற, மன்னரும் உடனடியாக ஒப்புதல்
அளித்துவிட்டார். இதனையடுத்து 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மெட்ராஸ் மாநகராட்சி
தொடங்கப்பட்டது.

நதானியேல் ஹிக்கின்சன் (Nathaniel Higginson) என்பவர் முதல் மேயராக பதவியேற்றுக்
கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், யூதர்கள்,
இந்துக்கள் என பலதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதே செப்டம்பர் 29ஆம் தேதி புதிய மேயர் தேர்வு
செய்யப்பட்டார். இப்படித் தான் இந்தியாவின் முதல் மாநகராட்சி தனது பணியைத் தொடங்கியது.
அப்போது ரிப்பன் மாளிகை கட்டப்படவில்லை. கோட்டைக்குள் இருந்த டவுன் ஹாலில் தான் முதல்
மாநகராட்சி செயல்பட்டது.

உற்சாகமாகத் தொடங்கப்பட்டதே தவிர அதன் செயல்பாடுகள் அத்தனை உற்சாகமாக இல்லை. ஆறே
மாதத்தில் முதல் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அடுத்ததாக லிட்டில்டன்
என்பவர் மேயரானார். மாநகராட்சி தனது பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி இல்லை என்ற
குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் எலிஹூ யேலுக்கும்
மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே அதிகார மோதல்கள் வெடித்தன. அப்படியே சண்டை
சச்சரவுகளுடன் போய்க் கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் 1727இல் மறுசீரமைக்கப்பட்டது.
நகரம் வளர வளர மாநகராட்சியின் பணிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இந்நிலையில் டவுன் ஹால் பகுதியை அரசு எடுத்துக் கொண்டதால் அங்கிருந்த மாநகராட்சி
அலுவலகம், ஜார்ஜ் டவுன் பகுதியின் எர்ரபாலு செட்டி தெருவுக்கு மாற்றப்பட்டது. பின்னர்
சில ஆண்டுகளில் அந்த இடம் போதவில்லை எனக் கருதப்பட்டதால் புதிய இடம் தேடும் படலம்
தொடங்கியது. அப்போதுதான் பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் ஒரு இடத்தை ஒதுக்கி மாநகராட்சிக்கென
புதிய கட்டிடம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது. அப்படித்தான் அந்தக் காலத்திலேயே ரூ.
7.5 லட்சம் செலவு செய்து தற்போதுள்ள ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளாக
இதைப் பார்த்துப் பார்த்து இந்தோ – சாரசனிக் பாணியில் பிரம்மாண்டமாக கட்டித்தந்த லோகநாத
முதலியார் கூலியாக வாங்கிய தொகை ரூ. 5.5 லட்சம்.

1913இல் இந்த கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் மூவாயிரத்திற்கும்
அதிகமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி கட்டிடம் என்பதால் உள்ளாட்சி
நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயரையே இதற்கும்
வைத்துவிட்டனர். அவரை நினைவு கூறும் வகையில் அவரது சிலை ஒன்றும் இங்கு நிறுவப்பட்டது.

252 அடி நீளமும், 126 அடி அகலமும் கொண்ட இந்த கட்டிடத்தின் முக்கியமான அம்சம், அதன்
நடுவில் இருக்கும் கோபுரம். 132 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் நடுவில் எட்டு அடி
விட்டத்தில் ஒரு பிரம்மாண்ட கடிகாரமும் அமைக்கப்பட்டது. இதற்கு தினமும் கீ கொடுப்பார்கள்.
அந்தக் காலத்தில் மெட்ராசிற்கு வரும் நிறைய பேர், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்த இந்த
மெகா சைஸ் கடிகாரத்தை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மாநகராட்சி இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு முதல் தலைவராக இருந்தவர் (அப்போது
மேயர் பதவியை தூக்கிவிட்டார்கள்) பி.எல். மூர். பின்னர் 1919இல் தான் மெட்ராஸ்
மாநகராட்சிக்கு முதல் இந்தியத் தலைவர் கிடைத்தார். அவர்தான் சர் பி. தியாகராய செட்டி.
மீண்டும் 1933ஆம் ஆண்டு மேயர் பதவி உயிர் பெற்று எழுந்தது. அப்போது முதல் மேயரானவர்
குமார ராஜா எம்.ஏ. முத்தையா செட்டியார். அதன் பிறகு இதுவரை மேயர் என்ற பதவி
தொடர்ந்து நீடித்து வருகிறது.

தற்போது ரிப்பன் அலுவலக வளாகத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது
நிறைவடைந்துவிட்டால், இதுவரை அருகில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து
செல்லும் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ரிப்பன் மாளிகை, தனது வளாகத்திற்குள்ளேயே
ரயில் வந்துசெல்லும் காட்சியையும் காணலாம்.

* இந்தியாவின் முதல் பெண் மேயரைத் தந்ததும் சென்னை மாநகராட்சிதான். அவர்தான் தாரா செரியன்.

* கிழக்கிந்திய டச்சு அரசாங்கத்தின் நிர்வாகத்தைப் பார்த்துதான் சர் ஜோசய்யா சைல்ட்டுக்கு
மாநகராட்சி ஏற்படுத்தும் யோசனை பிறந்ததாக கூறப்படுகிறது.

வீட்டுக்கு ஒரு வேம்பு..

வீட்டுக்கு ஒரு வேம்பு


அருகிலேயே இருப்பதாலும் அதிகமாக கிடைப்பதாலும் இதன் அருமை பலருக்கு தெரிவதில்லை!

வீட்டுக்கு ஒரு வேம்பு வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது !!!

வீட்டு வாசலில் வேம்பு - நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் 'அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica).
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும்

'அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.
.
'வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் 'கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.

இலை:

வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.
வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

பூ:

வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.
விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.
வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

பட்டை:

வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.

பிசின்:

உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

புண்ணாக்கு:

வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு (Biography)


இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் தலைவருமான 'தேசத் தந்தை' மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு (Biography)

மகாத்மா காந்தி அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948)


‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 02, 1869

இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர்

இறப்பு: ஜனவரி 30, 1948

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்

பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.

இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922 ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

காந்தியின் தண்டி யாத்திரை

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.

இறப்பு

அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.

வாழையிலை..


வாழையிலை..!

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். . இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

Wednesday, October 1, 2014

அருகம்புல் “ஜூஸின்” பயன்கள் :-


அருகம்புல் “ஜூஸின்” பயன்கள் :-


*சிறந்த இரத்த சுத்தியாக அருகம்புல் “ஜூஸ்” விளங்குகிறது. வயிற்றுப்புண், வாயுக்கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றை இது சீராக்குகிறது.

*உடலில் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த குறைபாடுகளை இது குணப்படுத்துகிறது.

*சொறி, சிரங்கு, வெண் புள்ளி, தேமல், அரிப்பு, விஷக்கடி போன்ற தோல் வியாதிகளுக்கு அருகம்புல் மிகச்சிறந்த மருந்து.

*காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 500 மிலி., சாப்பிட்டால் இதிலிருந்து மீண்டு வரலாம்.

*சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் “ஜூஸ்” மிகவும் உகந்தது. சர்க்கரையால் ஏற்படும் கால் எரிச்சல், முழங்கால் வலி, உடல் சோர்வு, கை கால் நடுக்கம் போன்றவை படிப்படியாக குறையும்.

*மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக அல்லது குறைந்த இரத்தப்போக்கை இது சமன் செய்கிறது. இதேபோல் உடல் சூட்டால் ஏற்படும் வெள்ளைப்படுதலை அருகம்புல் “ஜூஸ்” குணப்படுத்துகிறது.

*அருகம்புல்லில் வைட்டமின் - ஏ, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து இருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

*ஆங்கில மருந்துகளை உட்கொள்வது நம்மால் தவிர்க்க இயலாததாகி விட்டது. ஆனால், இவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளை நாம் தான் சந்திக்க வேண்டியுள்ளது. அருகம்புல் “ஜூஸ்” குடிப்பதால் இதுபோன்ற பக்க விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

இயந்திரத்தனமாகிவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில் உரிய நேரத்துக்கு சாப்பிடும் பழக்கத்தை நம்மில் பலர் கடைபிடிப்பதில்லை. இதனால் பல்வேறு வயிற்றுக்கோளாறுகளை சந்திக்கிறோம். நீண்ட நேரம் பணிபுரிவதால் ஏற்படும உடல் அயற்சி மற்றும் நரம்புக் கோளாறுகளுக்கு அருகம்புல் சிறந்த “டானிக்”.

இத்தகைய அருமை பெருமைகளைக் கொண்ட “சர்வரோக நிவாரணி” யாக திகழும் அருகம்புல்லின் மகத்துவத்தை இனியாவது நாம் உணர வேண்டும். அருகம்புல் சாறு தினமும் பருகி உடல்நலன் பேணுவோம்.

தினமும் டீ, காஃபி குடிப்பதைப்போலவே அருகம்புல் “ஜூஸை” குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் அருந்தலாம்.

அருகம்புல் “ஜூஸ்” தயாரிப்பது எப்படி?

கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளி துவங்கி வீட்டின் கொல்லைப்புறத்தில் நாம் போட்டிருக்கும் தோட்டம் வரை அனைத்து இடங்களிலும் அருகம்புல்லை எளிதாகப் காணலாம். அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி, தூய்மைப்படுத்த வேண்டும். இதன் பிறகு நம் தேவைக்கேற்ப அருகம்புல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து உரல், கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இதன் பிறகு அரைத்தெடுக்கப்பட்ட அருகம்புல் பிரித்தெடுக்க வேண்டும்.

இப்போது இளம் பச்சை நிறத்துடன் கூடிய அருகம்புல் “ஜூஸ்” தயார். ஜூஸ் தயாரிக்கும் போது கொஞ்சம் துளசியை சேர்த்தால், சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் நல்லது.

உப்பின் மகத்துவம்:-

உப்பின் மகத்துவம்:-



* உப்பு என்பது ருசிக்காக மட்டுமல்ல, மருந்தாகவும் பயனளிக்கும் வலிமை கொண்டது. அதனால் உப்பு நமது உடலில் இருப்பது அவசியம். அதேநேரத்தில் அதிகமான உப்பு ஆளையே தின்று விடும்.

* ஐஸ் கட்டிகளை கரையவைக்கும் ஆற்றலும் உப்புக்கு உண்டு. பல் வலிக்கு உகந்தது உப்பு. அதனால்தான் இப்போது டூத் பேஸ்டிலும் உப்பு வந்து விட்டது.

* வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பை சேர்த்து வாயை கொப்பளித்தால் பற்சிதைவு நீங்கி விடும். மிதமான அளவு உப்பு உயர் இரத்த அழுத்தத்தை போக்கும்.

* உப்பு வாழ்க்கைக்கு மட்டுமல்ல உடலின் அமைப்புக்கும் அதுவே காரணமாக இருக்கிறது. உப்பு இல்லாமல் யாராலும் ஒரு நிமிடம் கூட உயிர்வாழ முடியாது. உப்பின் மீது நமக்கு இருக்கும் மோகம் மூளை அணுக்களையும் மூளையின் தொடர்புகளையும் மரபணுக்களையும் தூண்டி விடுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

* சிலர் போதைக்கு அல்லது சிகரெட்டிற்கு அடிமையாக இருப்பார்கள். அந்த போதை அல்லது புகை கிடைக்காவிட்டால் அவற்றின்மேல் உள்ள மோகம் அதிகரிக்கும். அப்போது அவர்களது மூளை பல்வேறு வழிகளில் சிந்திக்கும். அதைப்போலவே உப்பை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டால் அது மூளையின் நரம்புகளை தூண்டிவிடும் என மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் டெரிக் டெண்டன் கூறுகிறார்.

* எலிகளை வைத்து நடத்திய சோதனைக்கு பிறகு இந்த முடிவு தெரியவந்தது. ஆனாலும் அளவான உப்பே வளமான உடல் நலத்திற்கு நல்லது என்று சராசரியான மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். தோலை பதனிடுவதற்கு மட்டுமல்ல நமது உடலையும் பத்திரமாக வைத்திருக்க உப்பு அவசியம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல அளவுக்கு அதிகமானால் உப்பு நம்மை சாப்பிட்டு விடும். எனவே உப்பை அளவோடு பயன்படுத்துவதே சாலச்சிறந்தது.

காமாட்சி விளக்கு!


விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.

சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள் கின்றனர். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன்திருவிளக்கே.

புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, "நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் மீது தீபம் ஏற்றப்படும். பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம்.
மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.

குத்து விளக்கு :

குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம். ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன.

உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக் குரியவையாகவும் ,சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.

பாவை விளக்கு :

ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம் .

தீபங்கள் பதினாறு :

தூபம், தீபம் புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ் (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்மா (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.

தூக்கு விளக்குகள் ஒன்பது :

1. வாடா விளக்கு
2. ஓதிமத்தூக்கு விளக்கு
3. தூண்டாமணி விளக்கு
4. ஓதிம நந்தா விளக்கு
5. கூண்டு விளக்கு
6. புறா விளக்கு
7. நந்தா விளக்கு
8. சங்கிலித் தூக்கு விளக்கு
9. கிளித்தூக்கு விளக்கு.

பூஜைவிளக்குகள் ஒன்பது :

சர்வராட்சததீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாகர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.

கைவிளக்குகள் ஏழு :

கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, சம்மனசு விளக்கு, கணபதி விளக்கு, கைவக் விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.

நால்வகை திக்பாலர் தீபங்கள் :
ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.

அஷ்டகஜ தீபங்கள் எட்டு :

ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சர்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.