Wednesday, June 4, 2014

சுற்றும் பூமியின் சுற்றுச்சூழல் காப்போம்:


சுற்றும் பூமியின் சுற்றுச்சூழல் காப்போம்:


இன்று உலக சுற்றுச்சூழல் தினம்..

நாம் வாழும் இந்த பூமியில், எதிர்கால தலைமுறையும் நலமாக வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். உலக நாடுகளுக்கு சவாலான பிரச்னையாக, சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்கிறது. மழை குறைகிறது. அன்டார்டிகா, இமயமலை பகுதிகளில் பனிகட்டிகள் உருகுவதால், கடல்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உணவை வீணாக்காதீர் :

உலகில் ஆண்டுதோறும் 130 கோடி டன் உணவு வீணாக்கப்படுகிறது என ஐ.நா., உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக்கிறது. 7 பேரில் ஒருவர் பசியுடன் தூங்குகிறார். ஐந்து வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் குழந்தைகள் பசியால் இறக்கின்றன. 700 கோடி மக்களுக்கு உணவளிக்க, தற்போதைய பூமி தடுமாறுகிறது. உணவுப் பொருளுக்கு மூல காரணம் தண்ணீர். சுற்றுச்சூழல் சீர்கேட்டால், தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, "சிந்தித்தல், உண்ணுதல், சேமித்தல்' - என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்தாக வைக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவுப்பொருளை வீணாக்குவதை தடுப்பது; அனைவருக்கும் உணவு கிடைப்பது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. உணவு சாப்பிடுவதற்கு முன் சிந்தியுங்கள்; சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள் என அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

எப்படி பாதுகாப்பது:

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்கு, ஒருவர் நினைத்தால் முடியாது. கோடிக்கணக்கான மக்கள் நினைத்தால் சாத்தியமாக்கலாம். இதற்கு என்ன செய்யலாம்?
* தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
* வீடுகள், அலுவலகங்களில் குறைந்தது 2 மரங்களையாவது வளர்க்க வேண்டும்.
* பயணங்களுக்கு சொந்த வாகனங்களை தவிர்த்து, பேருந்தை பயன்படுத்தலாம்.
* வழக்கமான குண்டு பல்புகளுக்கு பதிலாக "சி.எப்.எல்.,' "எல்.இ.டி.,' பல்புகளை பயன்படுத்தலாம்.
* "ஏசி'யில் பயன்படுத்தப்படும் "ஏர்-பில்டர்'களை மாதத்துக்கு ஒருமுறையாவது சுத்தப்படுத்த வேண்டும்.
* வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்கள் "சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
* மரம் மற்றும் கிரானைட் கற்களால் செய்யப்படும் பொருட்களை குறைத்துக் கொள்ளவும்.
* சூரிய சக்தியில் இயங்கும், "வாட்டர்-ஹீட்டர்'களை பயன்படுத்தலாம்.
* கடிதம் எழுதுவதை விட, இ-மெயில் மூலமான தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளலாம்.
* ஸ்பிரே பெயின்ட்களுக்கு பதில், பிரஷ்களையோ, ரோலர்களையோ பயன்படுத்தலாம்.
* கடைகளுக்கு செல்லும் போதே துணிப்பை எடுத்துச் சென்றால், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கலாம்.
* வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும்.
* பேப்பரின் இரு புறங்களையம் பயன்படுத்த வேண்டும்.
இது போல ஒவ்வொருவரும், அன்றாட வாழ்க்கை முறையில் மாறுதல்களை செய்வதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்க முடியும்.

தண்ணீர் மாசுபடுவது ஏன்:

ஏ.பாக்கியம், மாநில அமைப்பாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம், திண்டுக்கல்:தண்ணீர் மாசுபடுவதற்கு தற்போதைய முறைகளே காரணம். பழைய முறைகளில் வீடுகட்டும்போதே சுற்றிலும் மரங்களை நடுவது என்று இருந்தது. இதன் மூலம் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, மரங்கள் உறிஞ்சுவதால் தண்ணீர் மாசுபடுவது தவிர்க்கப்பட்டது. தற்போது வீட்டுக்கழிவு நீர், சாக்கடைகள் வழியாக வெளியேறுகிறது. இவை நகர்புறங்களில் உள்ள நீர்நிலை ஆதாரங்களில் தேங்கி மழை நீர் தேங்கும் இடத்தில் மாசு ஏற்படுத்துகிறது.திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலை கழிவுகளை மழை காலங்களில் சுத்திகரிக்காமல் திறந்துவிடுவதால் இவை குடகானாற்றில் சென்று கலப்பதால் குடிநீர் ஆதாரங்களும் மாசுபடுகிறது.

மரம் வளர்த்தால் போதும்:

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெசி ஜெயகரன், மதுரை: சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளர்ப்பது மிக அவசியம். சொந்த வீடானாலும், வாடகை வீடு என்றாலும் தோட்டங்கள் அமைக்கலாம் அல்லது முருங்கை, பப்பாளி அல்லது செம்பருத்தி போன்று ஏதாவது ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், 2 லிட்டர் வாட்டர் கேனை கட்டாக்கி, அதில் மணல் நிரப்பி, கீரை, கொத்தமல்லி, வெந்தையக் கீரை, பசலிக்கீரை போன்றவை வளர்க்கலாம். இதற்காக, வீடுகளில் வீணாகும் காய்கறிகளை உரமாக பயன்படுத்தலாம். வார்டுகள் அல்லது தெருக்களில் வீடுகளில் மரம் வளர்க்கும் போட்டிகளையும் அரசு அறிவித்து, நன்றாக வளர்த்தவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம்.

மாணவர்கள் நட்ட1.37 லட்சம் கன்றுகள்!

சுற்றுச்சூழலை காக்க மரங்கள் நடுவதே ஒரே வழி. மதுரையில் 200 பள்ளிகளில், 2 ஆண்டுகளில் 1.37 லட்சம் மரக் கன்றுகள் மாணவர்களால் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. "பிளாஸ்டிக்' இல்லாத பள்ளி வளாகங்களாக மாற்றும் முயற்சியில், சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகின்றன.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி: மாணவர்களின் பிறந்த நாட்களை முன்னிட்டு, அந்தந்த மாணவர்களே அவர்கள் படிக்கும் பள்ளி வளாகம் அல்லது வீடுகள் அருகே மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கும் திட்டம் உள்ளது. 393 பள்ளிகளில், 50 மாணவர் உறுப்பினர்கள் கொண்ட "சுற்றுச்சூழல் மன்றங்கள்' செயல்படுகின்றன.இந்த மன்றங்கள் செயல்பாட்டிற்காக, தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.2500 நிதி ஒதுக்கியுள்ளது. இந்தாண்டு 50 ஆயிரம் மரக் கன்றுகள் நடுவதற்கான திட்டம் உள்ளது.

பொறுமைக்கும் எல்லையுண்டு:

பொறுமைக்கு பூமி தாயை உதாரணம் காட்டுவதுண்டு. பூமி தாயின் பொறுமையை, நாம் அன்றாட செயல்களால் முடிந்தளவு சோதிக்கிறோம். எளிதாக, மலிவாக கிடைக்கிறது என்பதற்காக, பயன்படுத்தும் பிளாஸ்டிக், பூமியின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. 20 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக், 300 ஆண்டுகளானாலும் மக்காதவை. கண்ட இடங்களில் போடப்படும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் மண்ணில் மக்காமல் கிடக்கின்றன. மழை காலங்களில் தண்ணீர் அடியில் செல்வதில்லை. புதைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து, மீதேன் வாயு வெளியாகி, நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. இந்திய பொறியாளர் கழக தலைவர் ராஜாமணி, ""பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, காகித, துணி பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காதவை என தரம் பிரிக்க வேண்டும். பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகளை முடிந்தளவு மக்காத பெட்டிகளில் போட வேண்டும். இதன் மூலம் ஓரளவு பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதை தவிர்க்கலாம்,'' என்றார்.

காற்று மாசுபட காரணம் யார்:

பேராசிரியர் டி.வேல்ராஜன், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை: இயற்கையான முறையில் எரிமலை கக்குதல், சதுப்பு நிலக் காடுகளில் வாயு வெளியேறுதல், காடுகளில் தீப்பிடித்தல் மூலம் காற்று மாசுபடுகிறது. ஆனால் மனிதனால் உருவாக்கப்படும் காற்று மாசு தான் அதிகம். தொழிற்சாலை, வாகனங்கள், வீட்டு எரிபொருட்களால் காற்றில் மாசு உருவாகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் வீடுகளில் இருந்து உருவாகும் எரிபொருள் மாசு தான் அதிகம். ஆனால் இதைப் பற்றிய விழிப்புணர்வே யாருக்கும் இல்லை. இன்னமும் 70 சதவீதம் பேர், கிராமப்புறங்களில் விறகு, கரி, மண்ணெண்ணெயை பயன்படுத்தி தான் சமைக்கின்றனர். "காஸ்' பயன்படுத்தினால், வீடுகளில் உருவாகும் மாசு குறையும். சென்னையை பொறுத்தவரை வாகனங்கள் மூலம் காற்றில் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு அதிகமாக உள்ளது. மதுரையில் இந்த இரண்டு வாயுக்களும் அதிகமாக இல்லை. பெரிய தொழிற்சாலைகளும் இல்லை. வாகனங்கள் செல்வதால், காற்றில் தூசி மிகமிக அதிகமாக உள்ளது. இந்த மாசுவால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும். கிராமமோ, நகர்ப்புறமோ எந்த ரோடாக இருந்தாலும் முழுமையாக அமைக்க வேண்டும். இரண்டு முனைகளும் தார்ரோடாக்கப்பட்டால் தான் தூசி வெளியேறுவது குறையும்.

மரங்களே முதலிடம்:

நிலம், நீர், காற்று, வாயு, ஆகாயம் என ஐம்பெரும் பூதங்களுக்கும் பலன் கிடைப்பதால், சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் மரங்களே முதலிடம் வகிக்கின்றன. ஒரு மரத்தால் விளையக்கூடிய பலன், பண மதிப்பில் ரூ. பல லட்சங்களை தாண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும்போது, மரங்கள் வெட்டப்படும் சூழல் உருவானது. இதனால் ஒரு மரத்தை வெட்டினால், நான்கு மரங்கள் நடப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ்தான் பணிகள் நடந்தன. ஆனால் ஒரு இடத்தில்கூட சாலையோர மரம் நடப்படவில்லை. இதனால் வாகனங்களின் புகை, ஒலி காற்றையும், ஆகாயத்தையும் பாதிக்கிறது

அழகு கலை...

அழகு கலை..

சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.
தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.
* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.
தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.
* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்.
* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.
* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.
* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.
* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.
* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.
புருவங்களை சீர்திருத்தி கொண்டால் முகம் அழகாக இருக்கும். மிக மெல்லிய புருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக அடர்த்தியான புருவம் வைத்துக் கொள்வதும் தற்போது நாகரிகம் இல்லை.
*நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
*லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள் இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள் ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும்.
*காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில் கலந்து கொள்ளும் போது டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க் போன்ற நிறங்களை பயன்படுத்தலாம்.
நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு. ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது. பிளவுசும் இறுக்கமாக இல்லாமல் சிறிது தொள தொளவென அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.
*சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று அழுத்தமான வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின் வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.
*ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.
*உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக் காட்ட குறுக்கு கோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட சேலைகளை அணிய வேண்டும்.
*மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை தூக்கி சீவ வேண்டும். கூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு அளவுடன் இருப்பதை போல் தோற்றம் கிடைக்கும். --

 https://www.facebook.com/subha.b.murugan

கைகளை பராமரிப்பது எப்படி?

கைகளை பராமரிப்பது எப்படி?


பெண்களுக்கு இன்று இருக்கும் வேலைப் பளுவில் கை, கால்களுக்கென்று தனித்தனியாக நேரமெடுத்து கவனிக்க நிச்சயம் பொறுமை இருப்பதில்லை. இதற்கென்று தனியாக இப்போது சலோன்கள் வந்துவிட்டாலும் அதற்கென்று செலவழிக்க மனமோ, பொறுமையோ பலருக்கு இருப்பதும் இல்லை. திடீரென்று ஒரு நாள் பார்க்கும்போதுதான் அய்யோ ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்று தோன்றும். பிறகு அந்த லோஷன், இந்த ஸ்க்ரப் என்று மாற்றி மாற்றி ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் உபயோகித்து விட்டு மறுபடியும் பழைய கதையையே தொடருவார்கள். இந்த விஷயத்தில் சில எளிய பழக்கங்களை பின்பற்றினால் இந்த நேரமின்மை பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
முதலில் கைகளுக்கு வருவோம். திருமணமாகும் வரை பட்டுப்போல் கையை வைத்திருப்பவர்கள் பிறகு அதனைப் பற்றி பெரிதாக நினைக்காமல் பாழாக்கிக் கொள்கிறார்கள். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, காய் நறுக்குவது, வீடு துடைக்க என்று பல விஷயங்களை அதுவரை என்றாவது ஒரு நாள் செய்தது போய் இப்போது அதுவே தினசரி கடமைகளாக ஆனபிறகு கைகளை எங்கே கவனிக்க என்று அலுத்துக் கொள்ளும் நிலைமை பொதுவாக எல்லாருக்குமே இருக்கும் . இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இன்னும் பொருந்தும்.
கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள எப்போதும் கிச்சன் சிங்க் அருகே ஒரு செட் பாத்திரம் கழுவும் கிளவுஸ்களை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கை அளவுக்கு அடுத்த சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் கஷ்டப்படாமல் உடனடியாக அணிய முடியும். சிறிய அளவில் இருந்தால் கிளவுஸ் வேறா என்ற எரிச்சல்தான் மிஞ்சும். ஒவ்வொரு முறையும் ஒன்றிரண்டு பாத்திரங்களுக்காக இப்படி கிளவுஸ் மாட்ட பொறுமையில்லை என்றால் அதிக அளவு பாத்திரங்கள் துலக்கும்போது மட்டுமாவது இதனை செயல்படுத்துங்கள். எப்போதுமே கிளவுஸ் பிடிக்காது என்பவர்கள் பாமோலிவ் டிஷ் க்ளீனிங் லிக்விட்டில் 'Tough on Grease , Soft on Hands" என்று குறிப்பிட்டிருக்கும் வெரைட்டி வாங்கி உபயோகப்படுத்தலாம். மற்ற பிராண்டுகளில் இந்த தன்மையுள்ள லிக்விட் கிடைத்தாலும் வாங்கி உபயோகப்படுத்தலாம். இதுதவிர கைகளில் தண்ணீர் படாத வண்ணம் தடுக்கும், ஹெவி ட்யூட்டி செய்பவர்களுக்கென்ற உள்ள சிலிக்கான் டைப் லோஷன்களை போட்டுக் கொண்டும் பாத்திரம் கழுவலாம். Avon Brand ல் இந்த வகை ஹேண்ட் க்ரீம் உள்ளது.
எப்போதும் கிச்சன் அருகே ஒரு சின்ன சைஸ் ஹேண்ட் லோஷன்(Vaseline Brand நன்றாக இருக்கும்) இருப்பது அவசியம். பாத்திரம் கழுவி முடித்ததும் கைகளை துடைத்து உடனடியாக லோஷனை போட்டுக் கொள்ளுங்கள். இது ஸ்ப்ரே அடித்து துடைப்பது, பாத்ரூம் கழுவுவது, வீடு துடைப்பது போன்ற வேலைகளுக்கும் பொருந்தும். அதே போல் ஒவ்வொரு இரவும் உறங்கப் போகும் முன் உப்பை 2 ஸ்பூன் அளவு எடுத்து, இரு கைகளிலும் படுமாறு நன்றாக ஸ்க்ரப்பிங் செய்து கழுவி, துடைத்து, பிறகு லோஷன் போட்டுவிட்டு படுங்கள். இதை தினசரி ரொட்டீனாக வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் முன்பு முகத்துக்கு எண்ணெய் தடவி ஊறவத்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கைகளுக்கும் தடவி மசாஜ் செய்யுங்கள். குளித்தபின்பு மறக்காமல் ஹேண்ட் அல்லது பாடி லோஷனை தடவுங்கள்.
நகம் வளர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடையாமல் காக்க ஹேண்ட் லோஷன் உபயோகிக்காமல் ஹேண்ட் அண்ட் நெய்ல் லோஷன் உபயோகிக்கலாம். நகங்கள் உடையாமல் இருக்கும். இவர்கள் கிளவுஸ் உபயோகிப்பதும் கூட நகங்களை பாதுகாக்கும். அடிக்கடி நகம் உடைகிறது என்ற பிரச்சணை உள்ளவர்கள் Nail Strengthening Polish என்று கிடைக்கும் (நெய்ல்பாலீஷ் போன்றே இருக்கும்) லிக்விட்டை தினமும் இரவு நெயில் பாலீஷ் போன்றே நகங்களுக்கு அப்ளை செய்யலாம். மோதிரம் அணிபவராக இருந்தால் இரவு அதனை அகற்றிய (திருமண மோதிரம் அணிபவராக இருந்தால் அது தவிர மற்ற மோதிரங்களையாவது கழட்டிவிடுங்கள்) பிறகே தூங்க செல்லுங்கள். இல்லாவிட்டால் மோதிரம் போட்ட இடம் ஒரு நிறமாகவும், அங்கே ஸ்கின் இறுகி கடினமாகவும் ஆகிவிடும். கைக்கு தேவையான அத்தனை காஸ்மெட்டிக் ரேஞ்சும் Avon, Palmer, Vaseline போன்ற பிராண்டுகளில் கிடைக்கிறது.
கைகளுக்கு வேக்சிங் அல்லது எபிலேட்டர் கொண்டு முடிகளை நீக்கலாம். வேக்சிங்கிற்கு டிஸ்போசபிள் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்துங்கள். தொற்றுநோய்களை தடுக்கலாம். அப்படி நீக்கும்போது மறக்காமல் விரல்களில், மோதிரம் போடும் இடங்களில் உள்ள முடிகளையும் நீக்குங்கள். மெஹந்தி போடுபவராக இருந்தால் உடைகளுக்கு பொருத்தமான மெஹந்தி டைப்பை தேர்ந்தெடுங்கள். உதாரணமாக வெஸ்டர்ன் உடைகளுக்கு பிளாக்/ அரேபிக் மெஹந்தி டிசைன்கள் நன்றாக பொருந்தும். கைகளில் மெஹந்தி எப்போதுமே சரியாக பிடிப்பதில்லை என்று சொல்லுபவர்கள் மெஹந்தியை போட்டு காய்ந்த பிறகு ரிமூவ் செய்ய தண்ணீருக்கு பதில் எண்ணெய் உபயோகித்து, பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 4,5 கிராம்பு போட்டு அதில் வரும் புகையை கை முழுக்க படுமாறு வையுங்கள். மருதாணி நன்கு பிடித்துக் கொள்ளும். மருதாணி கைகளில் காயும்போதே, ஒரு சின்ன கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றில் சக்கரையை கலந்து திக்காக வைத்துக் கொண்டு அதனை பஞ்சில் தொட்டு,கைகளில் இருக்கும் மருதாணியில் தடவுங்கள். இதுவும் மருதாணி கலர் நன்கு வர உதவும். கவரிங் அல்லது பேன்சி கடைகளில் இருக்கும் வளையல்களை அணிபவராக இருந்தால் அது உங்கள் கைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறதா என்று டெஸ்ட் செய்து அணியுங்கள். ஏனென்றால அலர்ஜி ஏற்பட்டு தோல் நிறம் பாதிக்கப்பட்டால் மீண்டும் பழைய நிறம் வருவது கடினம்.
இப்போது வீட்டிலேயே எளிமையாக செய்து கொள்ளும் மெனிக்யூர் முறை பற்றி இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மெனிக்யூர் செட் அல்லது எக்ஸ்ட்ரா அட்டாச்மெண்ட் உள்ள நெயில் கட்டர்ஹேண்ட் லோஷன்ஸ்க்ரப்பர்சின்ன சைஸ் பேபி பிரஷ்ஒரு கப்பில் தண்ணீர்சிறிது லிக்விட் சோப்
முதலில் கைகளுக்கு ஸ்க்ரப் போட்டு நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள். ஈரத்தை துடைத்துவிட்டு, சிறு கப் தண்ணீரில் லிக்விட் சோப் சிறிது விட்டு நன்றாக கலந்து, அந்த நீரில் விரல் நுனிகள் அதாவது நகங்கள் முழுவதுமாக மூழ்கும் அளவு 5 நிமிடம் ஊறவிடுங்கள். இப்படி செய்வதால் கைகளில் ஓரங்களில், நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை முற்றிலும் நீக்க முடியும். பிறகு பிரஷ் கொண்டு நன்றாக நக இடுக்குகளிலும் ஓரங்களிலும் தேயுங்கள். கைகளை நேரடியாக டேப் வாட்டரில் சோப் கொண்டு கழுவுவதைவிட அழுக்கை நீக்க, இது சிறந்த பலன் தரும். அதே பிரஷைக் கொண்டு கை முழுவதையும் நன்றாக முக்கியமாக உள்ளங்கைகளில் தேய்த்து கழுவுங்கள். இதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்படும். மிகவும் தேர்ச்சி உள்ளவர்கள் மட்டும் கை தோல் அதிகம் கடினமான இடங்களில் Corn Blade உபயோகிக்கலாம். இதை உபயோகிக்க நல்ல பயிற்சி அவசியம். சலோனிலேயே காலுக்கு மட்டும்தான் Corn Blade உபயோகிப்பார்கள். கைகளுக்கு என்றால் உபயோகிக்க மாட்டார்கள். தெரியாமல் உபயோகித்து கையில் வெட்டிக் கொள்ளாதீர்கள்.
Corn Blade என்பது காய்கறி தோல் சீவுவது போல் கால்களில் சேர்ந்திருக்கும் மிக கடினமான தோல்களை நீக்கப் பயன்படுவது. பார்க்கவும் சின்ன சைசில் தோல் சீவி போன்றே இருக்கும். உபயோகிக்க எளிது. முதலில் கால்களுக்கு உபயோகித்துப் பார்த்து பிறகு, கைகளுக்கு ஒரு முறை மட்டும் செய்யலாம். ஏனென்றால் கால்களில் ஷூ, செருப்பு அணிவதாலும், நமது வெயிட்டை தாங்குவதாலும் உள் பாதங்களுக்கு மாதம் ஒரு முறையாவது தேவைப்படும் Corn Blade, கைகளுக்கு ஒரு முறை உபயோகித்தாலே போதும். பிறகு நமது ஒழுங்கான கவனிப்பிலேயே கடினமான தோல் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
இப்போது நெயில் கட்டர் கொண்டு நகங்களை ஷேப் செய்யுங்கள். முனையில் அரைவட்ட வடிவில் இருக்கும் நகங்கள் எப்போதும் உள்ள ட்ரெண்ட் என்றாலும் மிக மாடர்ன் லுக் ட்ரெண்ட் இப்போது நேர்வடிவ முனையுள்ள நகங்கள்தான். இதற்கு சதுர பக்கங்களைப் போன்று மேல்புறம் ஷேப் செய்ய வேண்டும். சைடுகளில் நகத்தை ட்ரிம் செய்தாலும் மேலே குறுகலாக வெட்டிவிடக்கூடாது. நகங்களை இப்படி வெட்டிய பிறகு ஃபைல் கொண்டு ( பொதுவாக நக வெட்டியிலேயே கோடு கோடாக பின் பக்கம் அட்டாச் செய்திருக்கும்) வெட்டிய இடங்களை தேய்த்து விடுங்கள். இதனை குழந்தைகளுக்கு நகம் வெட்டும்போதும் செய்யலாம். அப்போதுதான் கீறாமல் இருக்கும். நமக்கும் நகங்கள் உடையில் மாட்டி இழுபடாது.
மெனிக்யூர் கிட்டில் உள்ள சிறிய கத்திரிக் கோல் அல்லது பேபி நெயில் கட்டர் கொண்டு விரல் முனையில் நகங்களுக்கு பக்கவாட்டில் உள்ள எக்ஸ்ட்ரா கடின தோல்களை வெட்டி நீக்குங்கள். பழக்கம் இருந்தால் நகத்தின் (நகம் ஆரம்பிக்கும் விரல் பகுதியில், வளர்ந்த நகப் பக்கத்தின் அடிப்பகுதி அல்ல) அடிப்பகுதியில் இருக்கும் தோலையும் லேசாக முனைகளை கட் செய்துவிடலாம். இதனை பார்லரைவிட நாமே செய்து கொள்ளும்போது நமக்கு வலிக்காதவாறு செய்து கொள்ளலாம். க்யூட்டிக்கள் புஷ்ஷர் என்று மெனிக்யூர் கிட்டில் இருக்கும். அது இல்லாதவர்கள் ஸ்டெரிலைஸ் செய்த பிளக்கரின் பின்புறம் அல்லது ஸ்பூனை உபயோகித்து நகத்தில் அடிப்பகுதியில் உள்ள சதையை கீழ் நோக்கி தள்ளிவிடுங்கள். இப்படி செய்வதன் மூலம் அந்த இடங்களில் இருக்கும் அழுக்கும் நீங்கும். நகமும் நீண்டதாக தோற்றமளிக்கும். பிறகு கையில் லோஷனை தடவி நன்றாக விரல்களை அழுத்தி மசாஜ் செய்யுங்கள். பிறகு கையினை கழுவி துடையுங்கள்.
இப்போது நெயில் பாலீஷ் போடும் முறையினைப் பார்ப்போம். இதில் என்ன பெரிய விஷயம், நெயில் பாலீஷ் இரண்டு கோட்டிங் கொடுத்தால் விஷயம் முடிஞ்சது என்று சொல்லுபவர்கள் இந்த முறையில் ஒரு முறை பாலீஷ் போட்டால் நிச்சயம் வித்தியாசத்தை உணருவார்கள். நெய்ல் பாலீஷ் போடும் முன்பு முதலில் நகத்திற்கு (Base Coat) பேஸ் கோட் அப்ளை செய்ய வேண்டும். இது நெயில் பாலீஷ் போன்றே இருக்கும். ஆனால் நிறமற்றதாக இருக்கும். பேஸ் கோட்டிங் போடுவது, நெயில் பாலீஷ் நன்றாக நம் கையில் பிடித்துக் கொள்ளவும், நகத்திற்கு நிறமாற்றம் போன்ற எந்த விதமான கெடுதல்களும் வராமலும் தடுக்கும். பேஸ் கோட்டிங் உலர்ந்ததும் முதலில் ஒரு கோட்டிங் நெயில் பாலீஷ் கொடுத்து, 2 நிமிடம் கழித்து இரண்டாவது கோட்டிங் கொடுக்க வேண்டும். இது உலர ஒரு 2 நிமிடங்கள் கொடுங்கள். பிறகு Front Coating தர வேண்டும். இந்த Front Coating பாலீஷும் நிறமற்றதாக நெயில் பாலீஷ் போன்றே இருக்கும். எல்லா பிரபலமான பிராண்டுகளிலும் இவை அனைத்துமே கிடைக்கும். கடைகளில் கிடைக்காமல் போனாலும், சலோனில் நிச்சயம் கிடைக்கும்.
இப்படி அப்ளை செய்வதன் மூலம் நெயில் பாலீஷ் நீண்ட நாட்கள் இருப்பதோடு, அங்கங்கே உரிந்து போகாமல், பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். சாதாரண நெயில் பாலீஷ் நிறமும் இந்த முறையில் போடும்போது கைக்கு அழகை தரும். அது தவிர நாமே வீட்டிலேயே French manicure செட் போல செய்து கொள்ளலாம். இதற்கு, நிறமற்ற Base Coat ஒரு முறை அடித்து, பிறகு அதன் மேல் Front Coating அடித்து 2 நிமிடம் உலர விடுங்கள். இப்போது நகம் வளர்ந்திருக்கும் நுனிகளில் மட்டும் வெள்ளை நிறத்தை நக வளைவு மாறாமல் அப்ளை செய்யுங்கள். இது மிகவும் ஸ்டைலிஷான லுக் தரும். வெள்ளை நிறத்துக்கு பதிலாக சில்வர், கோல்ட் என்றும் உபயோகிக்கலாம். உங்கள் நகங்கள் இயற்கையாகவே பளபளப்பாக நகம் மட்டும் வெள்ளை வெளேரென்று இருப்பதுபோல் தெரியும். உடையின் நிறத்துக்கேற்றவாறு நகப்பாலீஷை மாற்ற முடியாதவர்கள், வெஸ்டர்ன் உடைகளை அடிக்கடி அணிபவர்களுக்கு, ஆபீஸ் செல்பவர்களுக்கு அனைவருக்குமே பொருத்தமாக இருக்கும். இது தவிர எப்போதும் சில்வர் கலர் பாலீஷ் கொஞ்சம் க்ளிட்டரியாக இருப்பதை வாங்கி வைத்துக் கொண்டால எப்போது நெயில் பாலீஷ் போட்டாலும், அதன் மேல் இரண்டாவது கோட்டிங்காக சில்வர் கலர் உபயோகித்தால் வித்தியாசமான பெப்பி லுக் கிடைக்கும். ஆனால் இதற்கு மிகவும் லைட்டான சில்வர் கலராக பார்த்து வாங்க வேண்டும். அதில் ஸ்டார் க்ளிட்டர், பெரிய க்ளிட்டர் என்று உள்ளதை வாங்கக்கூடாது.

கோவிலுக்கு வெளியில் செருப்பை கழற்றுவது ஏன்?

கோவிலுக்கு வெளியில் செருப்பை கழற்றுவது ஏன்? 

 

 செருப்பணிவது சுயகௌரவப் பிரச்சனையாக மக்கள் கருதுகிறார்கள். புண்ணிய கருமங்கள் அனைத்தும் செருப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கோயிலில் நுழையும் போது செருப்பணியல் ஆகாது என்பது கட்டாயம் சில கோயில்களில் சட்டை அணிவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
கோவில் சுவர்களுக்குப்பட்ட இடம் அனைத்தும் தெய்வ பூமி என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. செருப்பை தவிர்த்து கோவிலுக்குள்ள நுழையும் போது பாதங்கள் இயல்பாக காந்த சக்தியுடைய தரையில் பதிகிறது. மனிதனின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமான பூமியின் காந்த சக்தி பாதம் தரையில் பதியும் போது உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

மேலும் கோவிலை சுற்றி மரங்களும் மூலிகை செடிகளும் வைக்கப்பட்டிருக்கும். இந்த மூலிகைகளுடைய மலர்களும், இலைகளும் கலந்த தண்ணீர் விழுந்த கோவில் மண்ணுக்கு மருத்துவ குணங்களும் அதிகமாக இருக்கும்.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு கர்வத்தையும் காலணியையும் தவிர்த்து இறை தரிசனம் செய்யும் போது காந்த சிகிட்சை நம்முள் நடக்கின்றது. இஷ்ட தெய்வங்களை தியானித்து வெகு நேரம் கோவிலில் இருக்கும் போது மனதுக்கும் உடலுக்கும் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?


 

கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?


அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால், கடவுளின் முன், நேர்எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும், மயிலும் முருகனிடமும், பாம்பும், கருடனும் விஷ்ணுவிடமும், சிங்கமும், காளையும் சிவபார்வதி முன்னிலையிலும் சாந்தத்துடன் கூடி இருப்பதைக் காணலாம். எதிரெதிர் குணமுள்ள விலங்குகளே, கடவுளின் முன் கூடி வாழும் போது, ஒரே இனத்தில் பிறந்த மனிதன் அன்புடன் கூடி வாழ்ந்தால் என்ன என்பதை இது வலியுறுத்துகிறது.

அறிவியல் சார்ந்த சுவாரஸ்யமான அறிவியல் தகவல்கள்


அறிவியல் சார்ந்த சுவாரஸ்யமான அறிவியல் தகவல்கள் ...........

புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை

வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)

ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள்

முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்

உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு

எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )

ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள்

மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ

மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு

எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்

எறும்புகள் தூங்குவதே இல்லை

மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.

கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்

பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்

ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்

பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது

உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.

பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்

பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை

முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது..

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.